புதன், 6 ஆகஸ்ட், 2014

கிறிஸ்தாயனம்


 மிழ் நாட்டுக் கிறித்தவரால் எழுதப்பட்ட முதல் கிறித்தவக் காப்பியம் என்னும் பெருமையை உடையது கிறிஸ்தாயனம் ஆகும். இதன் ஆசிரியர் கிறித்தவக் கீர்த்தனைகள் எழுதிப் புகழ் பெற்ற ஜான் பால்மர் ஆவார். இக்காப்பியம் ஜான் பால்மரால் 1865 ஆம் ஆண்டு நாகர்கோவிலில் பதிப்பிக்கப்பட்டது. பின்னர் இக்காப்பியம் இரண்டாம் பதிப்பாக 2008 ஆம் ஆண்டு ஆசியவியல் நிறுவனத்தின் மூலம் வெளிவந்தது.

ஆசிரியர் வரலாறு

 கன்னியாகுமரி மாவட்டக் கீர்த்தனைக் கவிஞர்களுள் முதன்மையானவர் ஜான் பால்மர். இவர் நாகர்கோவிலிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள மயிலாடி என்னும் ஊரில் 1812 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆம் நாள் பிறந்தார். இவ்வூரில் தான், தென் திருவிதாங்கூரின் முதல் சீர்திருத்த ஆலயம் 1809 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இச்சபை குமரி மாவட்டம் மற்றும் தென்கேரளத் திருச்சபைகளுக்குத் தாய்ச்சபையாக விளங்குகிறது.

கிறித்தவரான வரலாறு

ஜான் பால்மரின் தந்தையார் ஞானப்பிரகாசம், தென்திருவிதாங்கூரின் முதல் கிறித்தவரான மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் நெருங்கிய உறவினர். ஆனால் வேதமாணிக்கம் தேசிகரைப் போல் கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளாதவர். வேதமாணிக்கம் தேசிகர் கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் கிறித்தவர் என்னும் பெருமைக்குரியவர். இவருடைய அழைப்பின் பேரிலேயே தரங்கம்பாடியிலிருந்த ஜெர்மன் நாட்டு மிஷனெரி அருள்திரு. ரிங்கல்தௌபே மயிலாடிக்கு வந்து திருப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத் தக்கது. வேதமாணிக்கம் தேசிகரின் மரபில் வந்த பலரும் மிக உயர்வான நிலையை அடைந்ததுடன் இறைப்பணியுடன் கிறித்தவ இலக்கியப் பணிகளும் செய்துள்ளனர். இவர்களுள் ஜான் பால்மர், தேவவரம் முன்ஷியார், அருள்திரு. சி. மாசிலாமணி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள். வேதமாணிக்கம் தேசிகர் கிறித்தவ சமயத்தைத் தழுவியதால் அவரை வெறுத்த ஞானப்பிரகாசம் ஆத்திரமடைந்து வேதமாணிக்கம் தேசிகரைச் சாபமிட்டு அவருக்கு எட்டு நாட்களுக்குள் நல்லதொரு பாடம் கற்பிப்பதாகக் கூறினார்.


எட்டு நாட்களுக்குப் பின்பும் தனது சாபம் மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரை நெருங்காததால் ஆத்திரம் அடைந்த ஞானப்பிரகாசம் முப்பது நாட்களுக்குள்ளாக வேதமாணிக்கம் இவ்வுலகில் உயிருடன் இருக்கமாட்டார் என மீண்டும் சாபமிட்டார். முப்பது நாட்கள் கழிந்த பின்னரும் எதுவும் நடை பெறவில்லை. வேதமாணிக்கம் தேசிகரின் பின்னிலைமையானது முன்னிலைமையைக் காட்டிலும் ஆன்மீக உற்சாகத்துடன் சிறப்பாகவே அமைந்தது. எனவே, தம் தோல்வியை ஞானப்பிரகாசம் ஒப்புக்கொண்டார். மகாராசன் வேதமாணிக்கம் தேசிகரின் தெய்வமே உண்மையான தெய்வம் என்பதை உணர்ந்து இயேசு கிறிஸ்துவைத் தம் சொந்த மீட்பராக ஏற்றுக் கொண்டார். ஞானப்பிரகாசத்திற்குப் பால்மர் எனவும், அவரது மகனுக்கு ஜான் பால்மர் எனவும் அருள்திரு. ரிங்கல்தௌபேயால் திருமுழுக்குக் கொடுக்கப்பட்டது. ஜான் பால்மரின் தந்தையார் மிஷன் வயல்களுக்கு மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். இன்றும் இவரது குடும்பத்தினர் அனைவரும் தங்கள் பெயருடன் பால்மர் என்னும் பெயரை இணைத்துள்ளனர்.

கல்வி

                தமிழிலக்கியத்தில் தேர்ச்சி பெறத் தமிழ்ப் பண்டிதர் திருவம்பலத் திண்ணமுத்தம் பிள்ளையிடம் ஆரம்பக் கல்வியும் தொடர்ந்து நாகர்கோவில் இறையியல் பள்ளியில் திருமறைக் கல்வியும் பயின்றார். தமிழ், ஆங்கிலம், மலையாளம், வடமொழி மற்றும் கிரேக்க மொழி ஆகிய பாடங்கள் அங்கு கற்றுக் கொடுக்கப்பட்டன. ஜான் பால்மர் இறையியலில் அதிக நாட்டம் கொண்டு விளங்கியதால் அவர் தந்தை உயர் கல்விக்காகச் சென்னைக்கும் பின்னர் யாழ்ப்பாணத்திலிருந்த வேதசாஸ்திரக் கல்லூரிக்கும் அனுப்பி வைத்தார். உயர் கல்வியை முடித்து மயிலாடிக்குத் திரும்பிய ஜான் பால்மரை மிஷனெரி அருள்திரு. மால்ட் தமக்கு எழுத்தராக நியமித்தார். தொடர்ந்து நாகர்கோவிலில் புதிதாக நிறுவப்பட்ட அச்சுக்கூடத்தின் பணிகளைக் கவனிக்கும் பொறுப்பாளராகவும் நியமனம் செய்யப்பட்டார்.

தொடக்ககாலப் பணி

ஜான் பால்மர் 1830 ஆம் ஆண்டு ஜூலை ஐந்தாம் நாள் பேரின்பம் அம்மாளை வாழ்க்கைத் துணைவியாக்கினார். இத்தம்பதியர்க்கு இரண்டு ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.

நாகர்கோவிலில் மிஷனெரியாகப் பணி செய்து வந்த அருள்திரு. மால்ட்டுக்கு ஊழியத்தில் துணை செய்யும் பொருட்டு அருள்திரு. ஆடிஸ் அனுப்பப்பட்டபோது அவருக்குத் தமிழ் கற்றுக் கொடுக்கும் பணியில் ஜான் பால்மர் அமர்த்தப்பட்டார். பின்னர் அருள்திரு. ஆடிஸ் கோயம்புத்தூர் பகுதியில் நற்செய்தி ஊழியத்தை ஆரம்பிப்பதற்காக அனுப்பப்பட்டபோது தம் குடும்பத்தினருடன் ஜான் பால்மரும் சென்றார். கோயம்புத்தூரின் காலநிலை திருமதி. பேரின்பம் அம்மாளுக்கு ஒத்துக் கொள்ளாததால் நோய்வாய்ப்பட்டார். எனவே ஓராண்டு நற்செய்தி ஊழியத்திற்குப் பின் குடும்பத்துடன் நாகர்கோவிலுக்குத் திரும்பினார்.

அருள்திரு. மால்ட், ஜான் பால்மர் குடும்பத்தை அன்புடன் ஏற்று, சுதேசி துணை உதவியாளராகப் பணியில் சேர்த்தார். பிற பணிகளுடன் அச்சுக்கூடத்தில் மொழிபெயர்ப்பு, மெய்ப்புகளைத் திருத்தும்பணி, கிறித்தவ நற்செய்திகளைத் துண்டுத்தாள்களில் அச்சிட்டு விநியோகம் செய்யும் பணி ஆகியவற்றையும் அருள்திரு. மால்ட்டுடன் மேற்கொண்டார்.

1845 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் நாள் இலண்டன் மிஷன் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு விழா மயிலாடியில் நடைபெற்றது. அன்றைய தென் திருவிதாங்கூரிலுள்ள அனைத்து மிஷனெரிமார்களும், ஊழியர்களும், கிறித்தவர் பலரும் கூடி ஆராதனை செய்தனர். ஆராதனையில் இலண்டன் மிஷன் சங்கத்தைப் பற்றியும் அருள்திரு. ரிங்கல்தௌபே, வேதமாணிக்கம் தேசிகர் ஆகியோரைப் பற்றியும் அவர்களின் சேவைகளைப் பற்றியும் ஜான் பால்மர் உரை நிகழ்த்தினார். மட்டுமின்றி,

இது சந்தோஷம், சந்தோஷம்

என்ற பாடலை இயற்றி அன்று இராகத்துடன் பாடினார். அச்சிறப்புத் திருநாளில் தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஊழியம் செய்வதற்காகக் கெம்பீர சத்தம் என்னும் குழு அமைக்கப் பட்டது. அக்குழுவில் ஜான் பால்மரும் உறுப்பினராய் இருந்தார். அக்குழுவின் முயற்சியினால் நாகர்கோவில் சேகரத்தின் வடபாகத்திலுள்ள புளிக்குடி, காட்டுப்புதூர், ஞாலம், அரசன்குழி, தாழக்குடி என்னும் கிராமங்களில் சபைகள் நிறுவப் பட்டன. ஜான் பால்மர் கவிபாடுவதுடன் புதிய சபைகளை நிறுவி ஊழியமும் செய்து வந்தார்.

நற்செய்தி ஊழியம்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதிலும் குறிப்பாகத் தென்திருவிதாங்கூர் பகுதியில் சாதிக்கொடுமை தலைவிரித்தாடியது. இதன் காரணமாக ஒடுக்கப்பட்ட, உரிமை மறுக்கப்பட்ட மக்கள் கிறித்தவ மதத்தில் சேர்ந்தனர். உயர்சாதிக்காரர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டிருந்தவர்கள், ஏழை மக்கள் கிறித்தவ மதத்தில் சேர்வதைப் பேரிழப்பாகக் கருதினர்.

இச்சூழலில், நாகர்கோவிலிலுள்ள கிருஷ்ணன்கோவில் என்னுமிடத்திற்கு நற்செய்தியைச் சொல்ல ஜான் பால்மர் சென்றார். உயர்சாதி எனத் தங்களைத் தாங்களே சொல்லிக் கொண்ட இந்துக்கள் அப்பகுதியில் அதிகமாக வாழ்ந்து வந்தனர். விக்கிரகங்கள் யாவும் கல், பித்தளை என்று ஜான் பால்மர் சொல்வதைக் கேட்ட அங்குள்ள பூசாரிக்குக் கோபம் ஏற்பட்டு இருவருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எங்கள் தெய்வங்கள் உண்மையானவை என்பதை அறிந்து கொள்வாய் எனச் சூளுரைத்துச் சபித்தார். ஜான் பால்மர் பூசாரியின் சவாலை ஏற்றுக் கொண்டு வீடு திரும்பினார்.

பூசாரியின் கூற்றுப்படியே அன்றிரவு பேய் ஒன்று பயங்கரத் தோற்றத்துடன் ஜான் பால்மர் முன் தோன்றி Ôஎங்கள் தெய்வங்களைப் பழித்தவன் நீ தானேÕ என்று அவரது கழுத்தில் தன் பத்து விரல்களையும் பதித்துக் கொல்ல முயன்றது. கவிஞர் உடனே பத்துக் கற்பனைகளை ஒன்றன்பின் ஒன்றாகச் சொல்ல, ஒரு கற்பனைக்கொரு விரலாக பேயின் விரல்கள் அகன்றதாம். அன்று இரவு நடந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த அவர் பேயின் பிடியினின்று தன்னைக் காத்த கர்த்தரை,

         பல்லவி
ஞானவாயித முண்டு பேயே நீ உன்னால்
ஆனதைப் பாரேன்
           அனுபல்லவி
தினம் பாவச்சுமையைப் போற்றி
எனில்மேவு நற்குணமாற்றி - உரத்
தாள எத்தனம் பார்த்தும் நினையான்
மாளச் செய்யவே
           சரணங்கள்
யேசுநாதர் எந்தனுக்காக வந்தனரே
அறியாயோ - யேசு
தாசன்முன் உன்உபாயம் வீணெனத்தான்
குறியாயோ - பின்னும்
                          2
ஆதித்தணுகத் துணிந்துபல வேஷமாயங்க
ளணிந்து - எனை
மோசப்படுத்தவோ வருகிறாய் மொக்கை
கெடுவையேஞான

என்ற பாடலால் துதித்தார்.

கீர்த்தனைகள் பாடிய விதம்

அருள்திரு. மால்ட் ஊழியத்தினின்று ஓய்வுபெற்று இங்கிலாந்துக்குச் சென்ற பின்பு, ஜான் பால்மருக்கும் மிஷன் பொறுப்பில் இருந்தவர்களுக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திருவனந்தபுரத்திலிருந்த அருள்திரு. மீட்டிடம் அடைக்கலம் புகுந்தார்.

தம் வாழ்வில் நடந்துவிட்ட துயர நிகழ்ச்சியால் தேவவரம் முன்ஷியாரின் மூத்த மகளை மூன்றாவது மனைவியாய் மணந்த அருள்திரு. மீட் மிஷன் ஊழியத்திலிருந்து விலகினார். பின் ஆங்கில அரசின் பிரதிநிதி (ஸிமீsவீபீமீஸீt) உதவியுடன் மாவட்டப் பள்ளி ஆய்வாளராகவும், பின்னர் திருவனந்தபுரம் அரசு அச்சகத்தின் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார். அச்சமயம் அருள்திரு. மீட், ஜான் பால்மரை அன்புடன் ஏற்று அச்சுக்கூடப் பணியில் அமர்த்தினார். தம் பணியிலும், கீர்த்தனைகளை இயற்றுவதிலும், இராகங்களைக் கற்றுக் கொள்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்ட ஜான் பால்மர் பக்திப் பரவசம் ஊட்டும் பாடல்களால் இறைவனை மகிமைப்படுத்தி வந்தார். திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாப சுவாமி கோவிலில் அதிகாலை நடக்கும் வழிபாட்டின்போது நாதசுர இசை ஒலிக்கும். அக்காலத்தில் சாதிக் கட்டுப்பாடும் மதவைராக்கியமும் உச்சகட்டத்தில் இருந்தன. ஜான்பால்மர் அக்கால இந்துமத ஆலய ஒழுங்குமுறையின்படி இந்துக் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படாத குலத்தைச் சார்ந்தவர். கீர்த்தனைகளை இயற்ற இராகம் மிகவும் இன்றியமையாதது. இராகங்களைக் கற்றுக் கொள்ள அதிகாலை வேளையில் தன் தலையைத் துணியால் மறைத்துக் கொண்டு கோயிலினுட் சென்று, பல புதிய இராகங்களைக் கற்று வந்து அதன் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவைப் பற்றிய கீர்த்தனைகளை இயற்றுவது இவரது வழக்கம். தம் உயிரையும் பொருட்படுத்தாது இறைமகன் இயேசு கிறிஸ்துவின் புகழ்பாட புதிய இராகங்களைக் கற்றுவந்த ஜான்பால்மரின்  துணிச்சல் பாராட்டுக்குரியது.        ஜான் பால்மரின் இத்துணிச்சலான செயலே பின்னாளில் திருவிதாங்கூரில் யாவர்க்கும் ஆலய பிரவேச உரிமைச் சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னோடியாக அமைந்தது எனலாம்.

கீர்த்தனைகளின் எண்ணிக்கை

ஜான் பால்மர் எழுதிய இருநூற்றுக்கும் மேற்பட்ட கீர்த்தனைகள் அச்சேறாமல் இருந்துவிட்டதால் அவை நமக்குக் கிடைக்கவில்லை. கிறிஸ்து குல ஆசிரமம், கிறித்தவ இலக்கியச் சங்கம், கன்னியாகுமரிப் பேராயம் ஆகியவை வெளியிட்டுள்ள கீர்த்தனைகளின் தொகுப்பு நூற்களிலும், மயிலாடியைச் சேர்ந்த சி.எம். ஆகூர் என்பவரால் எழுதப்பட்ட திருவிதாங்கூர் சபைச் சரித்திரம் என்னும் நூலிலிருந்தும் 54 கீர்த்தனைகள் இன்று கிடைக்கின்றன.

பிற படைப்புகள்

கீர்த்தனைகள் மட்டுமின்றி வேறுபல நூற்களையும் இவர் படைத்துள்ளார். அவை,
1.            ஞானப்பதக் கீர்த்தனம் 
2.            கிறிஸ்தாயனம் 
3.            மேசியா விலாசம்
4.            சத்திய வேத சரித்திரக் கீர்த்தனை 
5.            பேரானந்தக் கும்மி
6.            நல்லறிவின் சார்க்கவி
என்பனவாகும்.

1. ஞானப்பதக் கீர்த்தனம்

இந்துக்களின் முத்துத்தாண்டவர் பதக் கீர்த்தனம், ஸ்ரீபராங்குச தாசர், ஸ்ரீவிஷ்ணுதர்சனசுகீதம் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஞானப்பதக் கீர்த்தனம் என்னும் நூலை இயற்றினார். இந்நூல் தற்போது கிடைக்கவில்லை. இந்நூலிலுள்ள கீழ்க்காணும் ஒரு பாடல் மட்டுமே கிடைக்கின்றது.

                 கேதாரம்                                                                             ஆதிதாளம்
                           பல்லவி
இன்னுமிரங்காயோ என்றன் கோனே - அடி
யேன் விடைபெறாமல் விலகேனே
பொன்னுலகத்தின் மகிமைதன்னை மறந்தின்னிலத்தில்
மன்னுயிரை மீட்கவந்த மனுவேலரசே யனுதின முனையுற
                     சரணங்கள்
1.             அய்யா வெளியேனைக் காண்பாரே - யுனை
                யல்லாமல் துணையெனக் கிரங்காரே
                உய்யா தெளியேனழிய - உற்ற பாவத்தைத் தொலைக்க
                மெய்யா யுத்தர வாதியான-மேசியா உனதிணையடி சரணம்

2.             புக்கு மெனைத்தள்ள மனம்தானோ - சும்மா
                போவென்றா லெங்கேனும் நான் போவேனோ
                 மிக்க பாரமுற்றழுந்து - வோரெல்லாரும் வாருமென்ற
                தக்கவுரை தானிணைந்து-தாங்குவாயென்றனை யுறுதுயரற

3.             தற்பரா வுனை விட்டெங்கே போவேன் - எனை
                தாபரிக்க யாருமில்லைக் காவேன்
                துப்புரவதாய் மன்றாடும் - தொண்டருக்கருளு நேசா
                செப்பும் யோவானின் கவிக்கு - தேற்றலாய் நீ செவிகொடுத்தருள்புரி.

2. மேசியா விலாசம்
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினைக் கீர்த்தனைகளின் மூலம் விளக்குவது மேசியா விலாசம். இந்நூல் இராம நாடகம், மகாபாரத விலாசம் போன்ற நூற்களைப் போல் அமைந்துள்ளது. இந்நூல் தற்போது கிடைக்கவில்லை. சான்றாகச் சில பாடல்கள் பின்வருமாறு :

     சினத்தே வலுகேசரி போலவன்
       சீற்றமாயதி வீற்றமாகவே
       மனத்தே தெனுமீர மிலாதிரு
       வாட்டை கீழுறு மாக்கள் யாவையும்
                                மடிய முடியபடு கொடிய வதைபுரியக்
                                கடுக முறுகிரண வீரரையேவ
       எழுந்தாரே ஊர் பெதுலேகம்
       அகத்தும் மேல்வளை தலத்தும் வீரர்கள்
       நுழைந்தாரே வீடுகடோறும்
       நுனித்து சாவிட வதிர்ச்சி மேவிட
                                உரிய வினந்தமர் மறுக விளைஞ்ஞரை
                                அரிவர் கறிச்சுரைக் காய்கள் போலவே
       மறைப்பார் சிலமாதர் சிறார்களை
       அறைக்குளும் மறை முறிக்குளுஞ் சிலர்
       விறைப்பார் அதிவீரர் முனேஎதி
       ருரைக்கவே பரிதபிக்கவே அவர்
                                முறுகி மகவுகளைத் தறிபட வுரமுடன்
                                தெறுகுவர் நதியெனச் செம்புன லோட
       தொடர்ந்தே ஓர் சேயும் விடாதவர்
       தொகுப்புடன் மகவனைத்துமே விழப்
       படர்ந்தே கூர்வாள்களி னாலுயிர்
       பதைத்திடக் குரலறுத்து வீசினர்
                                மடிய மதலைகளி னுரியவனை கணனி
                                கிடுகிடென வழுதொப்பாரி கூற.

3. சத்தியவேத சரித்திரக் கீர்த்தனை

சத்தியவேத சரித்திரக் கீர்த்தனை நூல் மேசியா விலாசம் நூலைப் போன்று அமைந்துள்ளது. இந்நூல் சத்திய வேதத்தின் சரித்திரத்தைக் கீர்த்தனை வடிவில் கூறுகின்றது.சான்றாக சில பாடல்கள் பின்வருமாறு :

நாடதின்மேல் சலம் நணுகிவறாதல் கண்டு
நாட்டு மிருகமெல்லாம் வாட்டமுற் றதிர்கொண்டு
சாடிப் பலவிடத்தும் ஓடிஓடி விறு
தாவில் முயன்று மிகச்சலித்துத் தவித்தங்குறு
                                தாவரமற்று அமிழ்ந்திறக்க
                                தீவிரமுற்று தரையின் மிசை
சலமினும் எழும்பிடத் தாழ்விடங்களிலுற்ற
சருவ ஊர்வனவும் தான்மடிந் திடமற்ற
மலைகெபிகளில் தங்கி வாழும் மிருகமெல்லாம்
மருண்டு துடிதுடித்துத் திரண்டு வனங்களெல்லாம்
                                வக்கிரமாக ஓடிச்சாடி
                                திக்குமுக்காக மடிந்துவிழ
சாலவளர்ந் தோங்கும் தருக்களும் முட்டிட
சலம் அங்கெழுந் துயர்ந்தமலைகளும் எட்டிட
மேலுலாவு பட்சிசால மெல்லாம் ஒன்றி
வீற்றிருக்க ஏதும் ஆற்றல் பற்றுதல் இன்றி
                                விண்ணுறத்தாவி மறிந்துபேழைக்
                                கண்ணுறமேவி முட்டிப்புரண்டு
சடைத்துக் கண்ணுறும் எந்த இடத்தும் பறந்துசாவி
சாரும் ஓரிரையும் நேரிடாது கூவி
துடித்துப் பதைத்துச்சிற கடித்து விழுந்துசாக
தொடுக்கச் சருவநாசம் முடிக்கப் பிரவாகமாக
                                   வந்தது பாரீர் மாபிரளயம்
                                  வந்தது பாரீர்

4. பேரானந்தக் கும்மி

கும்மிப் பாடல்களால் இயற்றப்பட்ட இந்நூலில் 53 மற்றும் 55 ஆவது பாடல்கள் மட்டும் இன்று கிடைக்கின்றன.    அவை பின்வருமாறு :
53.          அங்கிரவில்லை விளக்கொளியோ மற்
                றாதித்தனின் சுடரோ வேண்டாம்
                துங்கமுறும் பரன்சோதிப் பிரகாசமாய்த்
                துலங்கி நிற்பரே ஞானப்பெண்ணே

55.           பூச்சி  துருவரியாத துங் கள்ளர்
                புகுந்து கொள்ளை புரியாத துமாம்
                சூட்சமுள்ள நல்ல பொக்கிஷ முண்டென்றும்
                சுதந்தரிக்கலாம் ஞானப் பெண்ணே

5. நல்லறிவின் சார்க்கவி

கவிஞர் வாட்  என்பவர் முதன்முதலாக எழுதிய விசுவாசப் பிரமாணத்தை நல்லறிவின் சார்க்கவி என்னும் தம் நூலில் கவிதை நடையில் படைத்துள்ளார். சான்றாக, அக்கவிதையின் நான்கு பாடல்கள் வருமாறு :

1.            உன்னைப் படைத்தவர் இன்னவரா
                                மென்றுரைத்திடாய்? வானும்
                இன்னிலமும் யாவும் பண்ணின
                                மெய்த்திரியேகனே.

2.             அன்னபரன் உனக்கிந்நாள்
                                வரையுமென்செய்கிறார்? ஆடை
                அன்னமோ டெல்லா மீந்தெந்நேரமும்
                                ரட்சை செய்கிறார்.

3.             இத்தனை நன்மைசெய் கர்த்தருக்கென்
                                செய்ய வேண்டும் நீ - அவர்
                சித்தமறிந்தவர்க் குற்றபணி
                                செய்ய வேண்டும் யான்.

4.             சித்தப்படி செய்யக் கர்த்தரென்
                                கட்டளை யிட்டனர்? - பரி
                சுத்தவசனமாஞ் சத்திய
                                வேதநூலிட்டனர்.

ஜான் பால்மரின் கீர்த்தனைகள் நற்செய்திக் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும் எளிய நடையில் அமைந்துள்ளன. கீர்த்தனைக் கவிஞர் ஜான் பால்மரைப் பற்றி பால்ம் என்பவர்,

இங்கிலாந்துக் கவிஞர் வாட் குழந்தைகளுக்காய் எளிய முறையில் இயற்றிய பாடல்களைப் போன்றே தென் இந்தியத் திருச்சபையில் ஜான் பால்மர் விளங்குகிறார். இவரது பாடல்கள் யாவரும் போற்றும் வகையில் எளிய அமைப்பினை உடையன
எனக் குறிப்பிட்டுள்ளார்.

இத்தகைய இனிய படைப்புகளைக் கிறித்தவத் தமிழ் உலகிற்குப் படைத்துத் தந்த ஜான் பால்மரின் முன்னோர்கள் பக்தி வைராக்கியம் மிகுந்த இந்துக்களாய் வாழ்ந்தவர்கள். சோதிடம், மருத்துவம், இலக்கியம் போன்ற கலைகளில் ஆழ்ந்த அறிவும் ஈடுபாடும் உடையவர்கள். இவர்கள் தொன்மை வாய்ந்த ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள். பல தலைமுறைகளுக்கு முன்னரே காவிரி பாயும் தஞ்சை பகுதியிலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள வல்ல நாட்டுப் பகுதியில் சென்று குடியேறியவர்கள். பின்னர் அங்கிருந்து நாஞ்சில் நாட்டுப் பகுதியான மயிலாடிக்குக் குடிபெயர்ந்தனர். வைதீக இந்துக் குடும்பத்தில் பிறந்த ஜான் பால்மரை மகத்துவம் மிக்கக் கீர்த்தனைக் கவிஞராக, காப்பியப் புலவராக  மாற்றியது மயிலாடி மண்.

துணைவியாரின் மறைவு

ஜான் பால்மரின் துணைவியார் பேரின்பம் அம்மாள் நோய்வாய்ப்பட்டு 1859 பெப்ரவரி ஒன்பதாம் நாள் காலமானார். இச்சோகமான சூழலில் ஜான் பால்மர் எழுதிய கீர்த்தனை பின்வருமாறு :

                பல்லவி
நொந்திடுமென் மனந்தேற - உறுதியுடன்
தந்தருள் கருணை தேவே!
          அனுபல்லவி
எந்த வேளையிலும் துணையென
உந்தன் முன்னுற வந்த பாதகர்
நந்தவிடாதரு டந்துரு குந்திரு
எந்தையேகனின் னிணையடி சரணம்

          சரணங்கள்

1.                    கொல்லவும் பிராணனீயவும்
                                                அளவிலா வல்லமை சிறந்த கோவே
                                நல்லுறவரில் இல்லெனச் சிலர்
                                                தொல்லுலகதின் எல்லை தாண்டினர்
                                புல்லறிவால திலல்லலுற்றேனினி
                                                சொல் லநின்று ணையலாது வேறிலையேநொந்திடு

2.                    பூதலத்தில் யான் வசிக்கும் காலமெலாம்
                                                ஏதுகுறை மேவினாலும்
                                போதுமென்றுரை சாதுளத்தோடு
                                                மாதவமதே யூதியம்மென
                                நீதிநெறி வழுவாதொழு கிடயான்
                                                பாதுகாப்புனது பாதமே சரணம்                 - நொந்திடு

ஜான் பால்மரின் மறைவு

எளிய இனிய கிறிஸ்தவக் கீர்த்தனைகளை எழுதிக் கொண்டும், கர்த்தரின் புகழ் பாடிக் கொண்டும் இருந்த கவிஞர் 1883 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 2 ஆம் நாள் தன்னுடைய 71 ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

ஜான் பால்மரின் மரணச் செய்தியைக் கேட்டு அவருடைய நெருங்கிய உறவினரும் கவிஞருமான அருள்திரு. சி. மாசிலாமணி மிகுந்த மனவருத்தத்துடன் பின்வருமாறு தம் கருத்தை வெளியிட்டார் :

திருச்சபையுள்ள மட்டும் அவர் கீர்த்தி மங்காமல் பிரகாசித்துக் கொண்டிருக்கும். கிறித்தவச் சபைகளுக் குள்ளும் குடும்பங்களிலும் அவருடைய கீர்த்தனை தொனிக்கப்படாத நாள் கிடைப்பது அபூர்வம். அவர் மரித்தும் பேசுகிறார். கிறித்தவ ஓய்வு நாட்களிலும், திருநாட்களிலும், விவாகோற்சவங்களிலும், ஷனனோற்சவங்களிலும் சபை அனைத்தும் மங்களப்படுத்தும் அவருடைய கீர்த்தனைகளே அவர் சபைக்காக வைத்துவிட்டுப் போன சம்பாத்தியம். இன்றியமையாத, யாவரும் மகிழ மேற்கொள்ள மலரும் மலராகிய இந்த மகானுடைய நாவும் வாடி அவருடைய உடலையும் அழிவு பட்சிக்கும்படி நேரிட்டதே? ஐயோ, தமிழ்நாட்டுச் சபையே! இவரைப் போன்ற ஒரு சுவிசேஜக் கவிராயர் இனியார் உனக்குக் கிடைக்கப் போகிறார்? இவருடைய ஒரே நாவு பாடி தனது மீட்பரை மகிமைப் படுத்துவதைப் பொறுக்க மனமில்லாமல் இவ்வளவு நிஷ்டூரமாய் அவரை அழிவுக்குள் ஒப்புவித்த மரணமே! ஆயிரம் பதினாயிரங்களான நாவுகளாய் அவருடைய மதுர கீர்த்தனைகளைத் தொனிக்கப் பண்ணுகிற கீத ஓசைகளை அழிக்க உன்னாலாமோ?

ஜான் பால்மருடைய உடல் திருவனந்தபுரத்திலுள்ள கிறிஸ்துநாதர் ஆலயத்தின் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இவருடைய நீங்காத நினைவாக இவர் பிறந்து வளர்ந்த மயிலாடி ஊரில் உள்ள ஒரு தெருவுக்கு ஜான் பால்மர் தெரு எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

கிறிஸ்தாயனம்    

இயேசு கிறிஸ்துவின் வாழ்வை விவரிக்கும் முதல் கிறிஸ்தவக் காப்பியம் கிறிஸ்தாயனம். இராமபிரானின் வரலாற்றை விவரிக்கும் காப்பியத்திற்கு இராமாயணம் எனப் பெயர் சூட்டியது போன்று, இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை விளக்குவதால் இந்நூலிற்கு கிறிஸ்தாயனம்  எனப் பெயரிட்டுள்ளார்.    இக்காப்பியம் கிறித்தவ கலாவிருத்திச் சங்கத்தாருக்காக நாகர்கோவில் இலண்டன் மிஷன் அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டது. தமிழ் நாட்டைச் சேர்ந்த ஒருவரால் எழுதப்பட்டு வெளிவந்த முதல் காப்பியம் கிறிஸ்தாயனம் என்பதால், அக்காலத்தில் இக்காப்பியத்திற்கு மிகுந்த வரவேற்பு இருந்ததுமேலும், ஜான் பால்மர் ஏராளமான கிறித்தவக் கீர்த்தனைகளையும், கிறித்தவச் சிற்றிலக்கியங்களையும் படைத்திருந்ததன் மூலம் இந்நூல் மிகுந்த சிறப்புடையதாகத் திகழ்ந்தது.

காப்பிய அமைப்பு

கிறிஸ்தாயனம் பாயிரம், தெய்வ வணக்கம், நூல் வரலாறு என்னும் பகுதிகளுடன் தொடங்குகிறது. இக்காப்பியம் பால காண்டம், கிரியா காண்டம், அவஸ்தா காண்டம், ஆரோகண காண்டம் என்னும் நான்கு காண்டங்களைக் கொண்டு 842 விருத்தப் பாக்களால் ஆனதுஒவ்வொரு காண்டமும் பல்வேறு உட் தலைப்புகளைக் கொண்டது.

தெய்வ வணக்கம்

தெய்வ வணக்கம் என்னும் பகுதியில் பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் திரியேகக் கடவுளைத் தனித்தனிப் பாடல்களின் மூலம் வணங்குகிறார். பிதாவை,

                                விண்ணதோடு பூவெலாம் விண்டுருப்படுத்தியே
                                அண்ணலாய்அ ரூபியாய் ஐம்புலன்கடந்து நின்
                                றெண்ணவும்வி ளம்பவும் எட்டொணாமலெங்கணும்
                                திண்ணமாய்நி றைந்த மா திவ்யதாதை காப்பதாம்        (காப்பு, பா.1)

என தெய்வ வணக்கத்தில் பாடுகிறார்.  
           
நூல் வரலாறு

தெய்வ வணக்கம் என்னும் பகுதியின் இறுதியில் நூல்வரலாறு  இடம் பெற்றுள்ளது. இதிலுள்ள  இரண்டு பாடல்களும் நூல் எழுதுவதற்கான காரணத்தையும், நூலில் இடம் பெற்றுள்ள செய்திகளையும் தெரிவிக்கின்றன.

 பண்டிறைவன் விதித்தளித்த பழவேற்பாடதில் குறியாய்
 விண்டுரைத்த தேவசுதன் விடுத்தாந்த மதுவிரிவாய்க்
 கொண்ட சுவிசேஷமதைக் கூர்ந்தாராய்ந் தெளிதுணரத்
 தண்டமிழால் இங்கமைத்துத் தமியேனு ரைக்கலுற்றேன்

       ஆண்டவனிங் கேமனுவாய் அவதரித்த வாறதுவும்
       ஈண்டிரட்சிப் பின்கிரியை இயற்றிவந்த வாறதவும்
       மாண்டுயிர்த்தெ ழுந்ததற்பின் வானடைந்த வாறுமவன்
       மீண்டுவந்து நடுத்தீர்க்கும் மேரையையும் கூறலுற்றேன்
                                                                                       (நூல் வரலாறு, பா.5, 6)

1. பால காண்டம்

கிறிஸ்தாயனத்தின் முதல் காண்டமான பால காண்டம், இயேசு கிறிஸ்துவின் பிறப்பு முதல் அவரது பன்னிரண்டு வயது வரையுள்ள செய்திகளைத் தருகிறது. கம்பராமாயணத்தைப் பின்பற்றி இயேசு கிறிஸ்துவின் இளமைப் பருவத்தை விவரிக்கும் முதல் காண்டத்திற்குப் பால காண்டம் எனப் பெயரிட்டுள்ளார். பால காண்டம் 55 பாடல்களைக் கொண்டுள்ளது. இப்பாடல்கள் ஒன்பது தலைப்புகளில் உள்ளன. இயேசு கிறிஸ்துவின் சிறப்பை திருக்குமாரன் மாட்சிமை என்னும் பகுதியில் கீழ்வருமாறு பாடுகிறார்:

ஆதியும் அந்தமும் அகன்ற நித்தியன்
சோதியிலணு கொணாத் துலங்கு சோபிதன்
கோதிலாதியலுசற் குணதயாபரன்
நீதியின் சூரியன் நிமல நாதனே  (  பால காண்டம், பா. 7)

2. கிரியா காண்டம்

இயேசு கிறிஸ்து செய்த அற்புதங்களை விளக்குவதால் அப்பகுதிக்கு கிரியா காண்டம் எனப் பெயரிட்டுள்ளார்இரண்டாவதான கிரியா காண்டத்தில் இயேசு கிறிஸ்து தன் சீடர்களைத் தெரிந்து கொண்டது முதல் பத்து ராத்தல் திரவியம் பெற்ற ஊழியக்காரரைக் குறித்து சொன்ன உவமை வரையிலான செய்திகள் இடம் பெற்றுள்ளன. கிரியா காண்டம் 50 உட்தலைப்புகளைக் கொண்டது. இக்காண்டத்திலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை  426 ஆகும்கடல் கொந்தளிப்பமர்த்தல் என்னும் உட்தலைப்பின்கீழ் காணலாகும் மூன்று பாடல்களும் பின்வருமாறு:

 ஜேசொரு நாள் படகேறிச் சீஷரோடு
பாசமொடு செலும்வேளை பள்ளி கொள்ள
மாசுழல் காற் றெழும்பியந்த மரக்கலத்தை
மோசமுறத் தக்கதாய் மோதிற்றன்றே

அங்கதிர்ச்சியால் சீஷர் ஐயரே யாம்
இங்கழிந்து போகிறோ மென்றெழுப்ப
உங்கள் விசுவாசமெங்கன் றுரைத்து ஜேசு
பொங்கு கடல் காற்றுடனே பொறு நீ என்றார்.

அவரதட்டக் கடல் காற்றும் அமர்ந்துபோக
நவமலவோ இதுவென்று நடுங்கிச் சீஷர்
தவமகத்வர் தாமிவரே சலதி காற்றும்
இவருரைகேட் கின்றனவே யென வியந்தார். 
                                                             (கிரியா காண்டம், பா. 210-212)

3.  அவஸ்தா காண்டம்

இயேசு கிறிஸ்து பட்ட  பாடுகளை விவரிப்பதால் இதற்கு அவஸ்தா காண்டம் (அவஸ்தை-துன்பம்) எனப் பெயரிட்டுள்ளார்அவஸ்தா காண்டத்தில் மரியாள் இயேசு நாதருக்குப் பரிமளத் தைலம் பூசுவதிலிருந்து அவர் சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் பண்ணப்பட்ட செய்திகள் விவரிக்கப்பட்டுள்ளன. அவஸ்தா காண்டம் 24 உட்தலைப்புகளைக் கொண்டது. இக்காண்டத்திலுள்ள மொத்தப் பாடல்களின் எண்ணிக்கை  249 ஆகும்.

அவஸ்தா காண்டம்  ஏழு வாரங்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. ஆதித்த வாரம் என்னும் பகுதியில் 10 பாடல்களும், சோம வாரம்  என்னும் பகுதியில் 3 பாடல்களும்குச வாரம் என்னும் பகுதியில் 50 பாடல்களும்,    புத வாரம் என்னும் பகுதியில் 4 பாடல்களும்குரு வாரம் என்னும் பகுதியில் 86 பாடல்களும்சுக்கிர வாரம் என்னும் பகுதியில் 82 பாடல்களும்மந்த வாரம் என்னும் பகுதியில் 10 பாடல்களும் உள்ளன. ஜான் பால்மர் கிழமை என்பதற்கு வாரம் என்னும் வடமொழிச் சொல்லைக் கையாண்டுள்ளார். ( ஆதித்த வாரம் - ஞாயிற்றுக் கிழமை; சோம வாரம் - திங்கள் கிழமை; குச வாரம் - செவ்வாய் கிழமை; புத வாரம் - புதன் கிழமை; குரு வாரம் - வியாழக் கிழமைசுக்கிர வாரம் - வெள்ளிக் கிழமை; மந்த வாரம் - சனிக் கிழமை ). பேதுரு ஆண்டவரை மறுதலித்தல் என்னும் தலைப்பில் பதினொரு பாடல்கள் உள்ளன. அவற்றில் இறுதி மூன்று பாடல்கள் இங்கு சான்றாகத் தரப்படுகிறது:

அப்பொழுது பேதுருதான் அதிகபய முற்று நீர்
செப்பியஅந் நரனாரோ தெரியாதெ னக்கெனவே
இப்படி மறுதலித்தவ் இகலாரின் கையினின்று
தப்ப உன்னிச் சாபமிட்டுச் சத்தியமும் பண்ணின்னே.

கோழியிரண் டாந்தரமும் கூவிடத்தன் சென்னியது
தாழவிடாதே சபித்துச் சத்தியமும் பண்ணி அங்கே
சூழநிற்கும் மாந்தரின்முன் துணிவுகொண்ட பேதுருவை
வீழவிடா தேகருத்தர் விழிநோக்கிப் பார்த்தனரே.


மீண்டிருகால் கோழி கூவிடுமுன் நீ முக்காலும்
மூண்டறியே னென்றெனைத்தான் முழுதுமறுப் பாய் எனவே
ஆண்டவர்உ ரைத்த வாக் கதையவன் அப் போதுணர்ந்து
தாண்டி வெளி சென்று மிகு தாபமுட னேஅழுதான்.
                                                                         (அவஸ்தா காண்டம், பா. 155-157)

4.  ஆரோகண காண்டம்

                இசைப்பாட்டின் ஏறுமுகக் குறிப்பினை நினைவில் நிறுத்தி, இயேசு கிறிஸ்து வானுலகம் சென்ற செய்திகளை விவரிக்கும் பகுதிக்கு ஆரோகண காண்டம் எனப் பெயர் சூட்டியுள்ளார்.   ஆரோகண காண்டத்தில் இயேசு பெருமான் உயிர்த்தெழுந்தது முதல் அவரது இரண்டாம் வருகை வரையுள்ள செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆரோகண காண்டம் 11 உட்தலைப்புகளைக் கொண்டது. இக்கண்டத்திலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை  106 ஆகும். பரிசுத்த ஆவியானவர் சீஷர்கள் மேல் இறங்கினது என்னும் தலைப்பிலுள்ள இரண்டு பாடல்கள் பின்வருமாறு:

மேவிய சீஷர் ஜேசு விண்ணெழுந்தீரைந்தாம் நாள்
தாவிஓர் வீட்டில் தங்க சடுதியாய்ப் பரிசுத்தாவி
மாவதிர் முழக்கத்தோடே வகிர்ந்த அக் கினிக் கொழுந்து
நாவுகட்கிணையாய் அன்னோர் நடுவினில் தோன்றினாரே.

அந்தவாறாவி சீஷர்க் களித்திடப்படவே அந்த
பெந்தெகோஸ்தெனும் விழாவில் பெயர்ந்தெலாத் திசை யினின்றும்
வந்தவர் பலரும் சீஷர் மறுபல பாஷை தன்னில்
விந்தையாய்ப் பேசக்கேட்டு மிகவும் ஆச்சரியமுற்றார்.
                                                                                         (ஆரோகண காண்டம், பா. 72, 73)
               
காப்பியத் தலைவர்

பெருங்காப்பியம் "தன்னேரில்லாத் தலைவனை உடைத்தாய்" அமைதல் வேண்டும் எனத் தண்டியலங்காரம் குறிப்பிடுகின்றது.   தேம்பாவணியில் சூசையப்பர் காப்பியத் தலைவராகவும், இரட்சணிய யாத்திரிகத்தில் கிறித்தவனாகிய யாத்திரிகன் காப்பியத் தலைவராகவும், பவுலடியார் பாவியத்தில் பவுல் காப்பியத் தலைவராகவும், திருத்தொண்டர் புராணத்தில் தேவசகாயம் பிள்ளை காப்பியத் தலைவராகவும் படைக்கப்பட்டுள்ளனர். கிறிஸ்தாயனம் விவிலியத்திலுள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நால்வர் எழுதிய நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளதால் இக்காப்பியத்தின் தலைவர் இயேசு கிறிஸ்துகாப்பியத்தின் தலைமை மாந்தரை அடிப்படையாகக் கொண்டு கடவுள் காப்பியம், அடியவர் காப்பியம், அரச காப்பியம், மக்கள் காப்பியம் எனக் காப்பியங்களைப் பகுக்கலாம் என்பர். அவ்வகையில் இது கடவுள் காப்பியம் என வகைப்படுத்தத் தகுதி உடையதாகும்.

கவிதையாக்கம்

விவிலியத்திலுள்ள நிகழ்வுகளை எளிமையான கவிதைகளாக மாற்றுவதில் வல்லவராக  ஜான் பால்மர் விளங்கியுள்ளார்கிறித்தவக் கீர்த்தனைகளை இயற்றியுள்ள  பயிற்சியின் மூலம்விவிலியத்திலுள்ள செய்தியை நேரடியாக, தெளிவாக, எளிமையாக, சுருக்கமாகக் காப்பிய வடிவில் அமைத்துள்ளார்பாயிரத்தில் இது குறித்த செய்தியை,

                கற்றவரன்றியுங் கல்லாதவரு
                முற்றெளிதாய்க்கண் டுணருதற்கிடனா
                யதியரும்பதங்க ளகல மிக்காறும்
                பொதுநிகழுரைகள் புலப்பட வமைத்து   (பாயிரம், அடி. 13-16)

என நுட்பமாக வெளிப்படுத்தியுள்ளார். இவரது கவிதையாக்கத்தின் மூலம் இவருக்குக் கம்பராமாயணத்தில் இருந்த புலமையையும், பிற பக்தி இலக்கியங்களில் இருந்த பயிற்சியையும்இலக்கண அறிவையும் அறிந்து கொள்ள முடிகிறது. பல்வேறு இலக்கியங்களைப் படித்து அவற்றை உள்வாங்கி அவற்றின் அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றைப் பாடியுள்ளார். இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை எளிமையாக எவ்வித வர்ணமும் இன்றிக் கவிதை நடையில் கொடுப்பதே இவரது இலக்கியக் கொள்கையாகும்.   திருமறையில் இல்லாத எக்கருத்தையும் ஆசிரியர் எவ்விடத்திலும்      கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்தாயனத்தில் ஆசிரியரின் தடையற்ற கவிதை ஓட்டத்தைக்  காணமுடிகிறது. சான்றாகச் சில:

"எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்ச ரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான்நீரோ நல்ல ரசத்தை இதுவரைக்கும் வைத்திருந்தீரே என்றான்" (யோவான் 2:10) என்னும் வசனத்தை,
                         ஏற்றவ்விருந்ததிபன் ரசமினிதாய் ருசிகொண்டே
                                மாற்றந்தகை யோராதவன் மணவாளனோடெவனும்
                                ஈற்றில் ருசிதாழ்வானதை இடுவா னிதுவரை நீர்
                                ஊற்றாது நல்ரசமானதை ஒளித்தீரென உரைத்தான் 
                                                                                                                                 (கிரியா காண்டம், பா.38)

எனப் பாடுகின்றார். இயேசு கிறிஸ்துவின் மலைப் பிரசங்கத்தைச் சிறப்பாகக் கவிதையாக்கியுள்ளார். சான்றாக,   
    
அகத்துளா துலர் அங்கடை வார்கதி
சுகத்துளாவர் துயர்படுவோர் பொறை
தொகுத்த சாந்தர்சு தந்தரிப்பார் புவி
திகைத் திடாரவர் சீருறு செல்வரே   

நீதிவாஞ்சையி னோர்நிறை வாகுவர்
மாதயையுளர் மன்னிடுவார் தயை
தீதில் தூய்நெஞ்சர் தேவனைக் காண்பரே
ஆதலால் வரும்மிகு செல்வரே
           
சாந்தி செய்பவர் தற்பரன் மக்களே
ஆர்ந்திதம் புரிந்தல்லுற் றோர்பரம்
சேர்ந்திருப்பர்ஜெ யத்துட னாகையின்
கூர்ந்தன்னோ ரனுகூலநற் செல்வரே              (கிரியா காண்டம், பா. 122-124)

என்னும் பாடல்கள் அமைந்துள்ளன."ஒருவன் உன்னை ஒரு மைல் தூரம் வரப் பலவந்தம் பண்ணினால், அவனோடு இரண்டு மைல் தூரம் போ" (மத்தேயு 5:11) என்னும் விவிலிய வாக்கினை,

                                ஒருவன் தன்னுடன் உன்னையொர் காதமே
                                வரமிகப்பல வந்தமியற்றிடில்
                                மருவி நீயிரு காதவரையுமே
                                உருவச் செல்லவ னோடிடை யாமலே    (கிரியா காண்டம், பா. 136)

என்னும் எளிமையான  பாடலாக மாற்றியுள்ளார்.  "விதைக்கிறவன் ஒருவன் விதையை விதைக்கப் புறப்பட்டான்; அவன் விதைக்கையில் சில விதை வழியருகே விழுந்து மிதியுண்டது, ஆகாயத்துப் பறவைகள் வந்து அதைப் பட்சித்துப் போட்டது. சில விதை கற்பாறையின் மேல் விழுந்தது; அது முளைத்தபின் அதற்கு ஈரமில்லாததினால் உலர்ந்து போயிற்று. சில விதை முள்ளுள்ள இடங்களில் விழுந்தது; முள் கூட வளர்ந்து, அதை நெருக்கிப் போட்டது. சில விதை நல்ல நிலத்தில் விழுந்தது, அது முளைத்து, ஒன்று நூறாகப் பலன் கொடுத்தது என்றார். இவைகளைச் சொல்லி, கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக் கடவன் என்று சத்தமிட்டுக் கூறினார்" (லூக்கா 8: 5-8) என்னும்   விவிலிய வசனங்களை ஜான் பால்மர் கீழ்வரும் கவிதைகளாக மாற்றியுள்ளார்:  

             விதைத்தானோ ருழவனங்கு விதைத்த வித்தில்
                சிதைப்பாக வித்துசில தெருக்கண் வீழ
                மிதிப்பார்தாள் பட்டுழல மீது புட்கள்
                கதிப்பாய்வந் தருந்தினவே கண்ணுற்றன்றே    

                வேறு சில விதை பாறை மீதில் வீழ
                கூறுபெற முளைத்ததற்பின் குளிர்மை யற்று
                மீறியெழு பரிதியதின் வெப்பத்தாலே
                ஊறுபட அதுசால உலர்ந்த தன்றே            

                மற்று சில வித்து முட்கள் மத்தி வீழ
                உற்றவையு முளைத்தெழும்ப ஊறாய் முட்கள்
                சுற்றியுற எழும்பியவை சோர்ந்து போக
                முற்று நெருக்கின அவற்றை முரிக்கத் தானே   

                சேதமுறா நன்னிலத்தில் சிலவித் துக்கள்
                பேதமற விழமுழைத்துப் பெருகி ஓங்க
                ஓது பலவாறு பலன் உண்டாயிற்று
                காதுளவன் இதைக்கேட்கக் கடவன் என்றார்.    (கிரியா காண்டம், பா.200-203)

ஜான் பால்மர் விவிலியச் செய்திகளை எளிமையாக, இலக்கணமுறைப்படி கவிதைகளாக மாற்றியுள்ளமைக்கு மேற்குறிப்பிட்டவை சில சான்றுகள்.

யாப்பு

ஜான் பால்மர் செவ்வியல் நெறிப்பட்ட யாப்பு வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார்.   காப்பியத்தில் எளிமையான கவிதை வடிவத்தைப் (சிந்து போன்ற வடிவம்) பயன்படுத்தவில்லை. அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம், எழுசீரடி ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலிநிலைத்துறை, விருத்தக் கலித்துறை, சந்தவிருத்தம், கலிசந்தவிருத்தம், வெளிவிருத்தம்வஞ்சி விருத்தம்  முதலிய இலக்கண வடிவங்களைப் பயன்படுத்தியுள்ளார். இதன் மூலம் இவரது இலக்கண அறிவினை அறிய முடிகின்றது.

ஜான் பால்மர் தமது காப்பியத்தின் அனைத்துப் பாடல்களிலும் இயல்பாக எதுகை, மோனையைப் பயன்படுத்தியிருப்பது அவருடைய கவித்திறனுக்குச் சான்றாக அமைகின்றது. இலக்கண அறிவும் பயிற்சியும் நிரம்பியவராகக் காணப்பட்டதால் இத்தகைய காப்பியத்தை அவரால் படைக்கமுடிந்தது எனலாம். ஒரு பாடலின் இறுதிச் சொல்லோ, சீரோ (அந்தம்) அடுத்த பாடலின் தொடக்கத்தில் (ஆதி) வருவதை அந்தாதி என்பர். இக்காப்பியத்தின் பல இடங்களில் அந்தாதி முறையில் பாடல்களை  இயற்றியுள்ளார் .

வடமொழிச் சொற்கள்

ஜான் பால்மர் தமது காப்பியத்தில் சில இடங்களில் வடமொழிச் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். ஜலம், ரசம், ஜெனனம், சம்பாஷனை,   ஸ்திரி,   புத்திரி,   சிரசுஅவஸ்தா (அவஸ்தைமுதலிய வட சொற்களைத் தன்கால நிலைக்கேற்பத்  தடையின்றி எடுத்தாண்டுள்ளார். சமயக் கலைச் சொற்களே மிகுதியாக இவ்வாறு கையாளப்பட்டுள்ளன.

வட்டார வழக்குச் சொற்கள்

அன்றைய தென்திருவிதாங்கூரின் ஒரு பகுதியான இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கிலிருக்கும் வட்டாரச் சொற்களை ஜான் பால்மர் தமது காப்பியத்தில் இயல்பாகவே பயன்படுத்தியுள்ளார்சான்றாகசூம்பின கையனைச் 'சொத்துக் கையன்' (கிரியா காண்டம், பா. 172) என்றும், ஆலயங்களில் விருந்து கொடுப்பதை 'அசனம்' (கிரியா காண்டம், பா. 182) என்றும்ஒரு மனிதரை அழைப்பதை 'ஓய்' (கிரியா காண்டம், பா. 185) என்றும், திக்கித் திக்கிப் பேசுவதைக்  'கொன்னைவாய்'  ( கிரியா காண்டம், பா. 288) என்றும், சுகவீனத்தைத்   'தீனம்' ( கிரியா காண்டம், பா. 389)  என்றும்சந்தேகப்படுவதைச்  'சமுசயம்'  ( அவஸ்தா காண்டம், பா. 13), என்றும்நாட்களை 'திவசம்' (கிரியா காண்டம், பா. 43) என்றும், சிறிய கூர்மையான துரும்பை 'சிரா' (கிரியா காண்டம், பா.153) என்றும் தம் காப்பியத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ஜான் பால்மர் தமது காப்பியத்தில் சில இடங்களில் இயேசு என்றும், பெரும்பாலான  இடங்களில் ஜேசு என்றும் சொற்களைப் பயன்படுத்தியுள்ளார்ஜான் பால்மர் இறைத் தொண்டர்களுடன் திருவனந்தபுரத்தில் பலகாலம் தங்கியிருந்ததால் மலையாள மொழியின் தாக்கம் இவரிடம் இயல்பாகவே இருந்திருக்க அதிக வாய்ப்பு உள்ளதுமலையாள மொழி பேசுவோர் இயேசுவை "ஜேசு" எனச் சொல்வர்ஆதலால்,    ஜேசு என்னும் பெயர்ச் சொல்லைப் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார்.       சான்றாக,

       ஜெருசலை நகர்சுற் றிடங்களிற் சென்று ஜேசு போதித்ததுமன்றி  ( கிரியா காண்டம், பா.61)
                 நாசரேத்தூரன் ஜேசுவைத் தேடி நாங்கள் வந்தோமென (அவஸ்தா காண்டம், பா. 124)

என்னும் பாடலடிகளைச் சுட்டலாம்.   வேறு எந்தக் கிறித்தவ இலக்கியங்களிலும் ஜேசு என்னும் சொல் பயன்படுத்தப்படவில்லைஆனால் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் இயேசுவை, சேசு எனக் கூறுவர். இச்சொல்லை   சில கத்தோலிக்கர்களும் தங்கள் இலக்கியத்தில் பயன்படுத்துகின்றனர். சான்றாக, சுடர்மணி என்னும் காப்பியத்தின் ஆசிரியர் எஸ். ஆரோக்கியசாமி காப்பியம் முழுவதிலும் சேசு எனக் குறிப்பிட்டுள்ளார்.

சில மாறுபாடுகள்

ஜான் பால்மர் சில பெயர்களை உட்தலைப்புகளில் பயன்படுத்தும்போது மொழிமுதல் எழுத்துகளை மனதில் கொண்டு எழுதுகிறார். யோவான் என்னும் பெயரை உட்தலைப்பில் பயன்படுத்தும் போது இயோவான் எனவும், லேவி என்னும் பெயரை இலேவி எனவும் பயன்படுத்துகிறார். மேலும், சகேயு என்னும் பெயரை சக்கேயு எனக் குறிப்பிட்டுள்ளார்.

 கிறிஸ்துவின் இரண்டாம் வருகை
               
இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை விளக்கும் காப்பியங்கள் இயேசு கிறிஸ்து  விண்ணகம் சென்றதோடு முடிவடைந்து விடுகின்றன. ஆனால் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றுடன் அவரது இரண்டாம் வருகையைக் குறித்த செய்திகளையும் சொல்வதில்தான் ஒரு முழுமை நிலையினை உணரமுடிகிறதுஇயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்து  கிறிஸ்தாயனத்தில் 11 பாடல்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

     மேலுலகில் எழுந்து சென்ற விதமே ஜேசு
                                மீண்டும் இங்கு வருவரென விண்ணோர் சொன்னாற்
       போலவர்மே கத்தெழுந்து சேனைதூதர்
                                புடைசூழ்ந்து வர வதிக மகிமையோடே
       தாலமதில் ஆதிமுதல் இறந்தோர் உய்வோர்
                                சகலமனுக் குலத்தோர்க்கும் நியாயந்தீர்க்க
       சால வொளிர் சோதிமயமாய் இறங்கிச்
                                சகமெலாம் கிடுகிடுங்கத் தோன்றுவாரே 

                                                                                 (ஆரோகண காண்டம், பா. 94)


                                சோரன் வரும் தன்மையதாய் நினையாவேளை
                                                தோன்றிடுவர் சாமமோ காலையோ அந்
                                நேரமதை யாரும் அறியார் அவர்க்கு
                                                நேர் புனிதராய்த் தெளிந்து நிற்பதற்கு
                                பாருலகில் பிழைத்திருக்கும் போதே உங்கள்
                                                பாவமதை உணர்ந் தறிக்கையிட்டு நல்ல
                                சீரடைந்தப் பரன்பாதம் சேர்ந்து கொள்ளும்
                                                சிதைவிலா வாழ்வடைதல் திண்ணந்தானே
                                                                                                  (ஆரோகண காண்டம், பா. 103)

என்னும் பாடல்களைச் சான்றாகச் சுட்டலாம். இவ்வகையில் இக்காப்பியம் பிற கிறித்தவக் காப்பியங்களிலிருந்து மாறுபட்டு முழுமையுடன் விளங்குகிறது.

 கிறிஸ்தாயனம் எளிமை நோக்குடன் எழுதப்பட்ட கிறித்தவக் காப்பியம். அனைவரும் படித்தறிய வேண்டும் என்னும் ஆசிரியரின் நோக்கம் பாராட்டிற்குரியதாகும். இக்காப்பியம் இரண்டாம் பதிப்பின் மூலம் அண்மைக் காலத்தில் வெளிவந்ததால் மக்களிடம்  அறியப்படாமல் இருந்த இக்காப்பியம் இன்று பேசப்பட்டும் ஆய்வு செய்யப்பட்டும்  வருகின்றது.


2 கருத்துகள்: