நூல் அறிமுகம்
நூல் : கிறித்தவக் காப்பியங்கள்
ஆசிரியர் : முனைவர்
யோ. ஞான சந்திர ஜாண்சன்
வெளியீடு : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
சென்னை -113
பக்கங்கள் : 500,
விலை ரூ 225/-
உலகப் பெருமொழியாக விளங்கும்
நம் ஒப்பற்ற தமிழ் மொழிக்கு
அமைந்த தனிச் சிறப்புகள் எண்ணற்றன.
அவற்றுள் முக்கியமான ஒன்றாகச் சுட்டத்தக்கது, எல்லா சமயத்தவரும் இனிய
தமிழில் தம் இறைக் கொள்கைகளைப்
பேரிலக்கியங்களாகவும் சிற்றிலக்கியங்களாகவும் படைத்துள்ளமையே. இதனால்தான்
தமிழைப் 'பக்தியின் மொழி' என்று பாராட்டுவர்.
'சமயந்தொறும் நின்ற தையலாள்' என்று
தமிழன்னையைப் புலவர் ஒருவர் வருணித்தார்.
அவ்வகையில் தமிழுக்கு இலக்கிய மணியாரங்கள் சூட்டிய
புலவர் பெருமக்களுள் கிறித்தவர்கள் தலையாவர் என்ற உண்மையை உறுதி
செய்யும் வண்ணமாக, அற்புதமான அரிய முப்பது கிறித்தவக்
காப்பியங்களை "கிறித்தவக்
காப்பியங்கள்" என்னும் இந்த அரிய
ஆய்வு நூலில் விரிவாகவும் தெளிவாகவும்
விளக்கியுள்ளார் நூலாசிரியர் முனைவர் யோ. ஞான
சந்திர ஜாண்சன் அவர்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சீர்திருத்தக் கிறித்தவர்களின் புண்ணியபூமி என்று அழைக்கப்படும் மயிலாடியில்
பிறந்தவரும் உலகிலுள்ள மிகப்பெரிய பழமையான கிறித்தவக் கல்வி
நிறுவனங்களில் மிகு புகழ் பெற்றதான
சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் மூத்த தமிழ்ப் பேராசிரியராகப்
பணியாற்றுபவருமான இந்நூலாசிரியர், கிறித்தவ இலக்கியங்களில் தணியாத தாகமும் குறிப்பாக
கிறித்தவக் கீர்த்தனைகளில் மாளாத ஈடுபாடும் கொண்டவர்.
கிறித்தவக் கீர்த்தனைகளின் பெருமை பற்றியும் கீர்த்தனைக்
கவிஞர்களின் வரலாறு பற்றியும் அரிய
ஆய்வு நூல்கள் பலவற்றை வெளியிட்டவர்.
அத்தகு சீரிய கிறித்தவ இலக்கிய
ஆய்வாளர், கடந்த சில ஆண்டுகளாக
அரும்பாடுபட்டு, ஆய்வுலகின் வெளிச்சத்துக்கே வராத அரிய பல
கிறித்தவக் காப்பியங்களைத் தேடிக் கண்டுபிடித்து, அவற்றின்
அருமை பெருமைகளையும் ஆழ நீள அகலங்களையும்
துருவி துருவி ஆய்ந்து, அவற்றை
இயற்றியருளிய புலவர் பெருமக்களுடைய வரலாறுகளையும்
கண்டறிந்து, ஓர் அற்புதமான பெருநூலாகத்
தொகுத்து வழங்கியுள்ளார். அண்மைக் காலத்தில் வெளிவந்த
கிறித்தவ இலக்கிய ஆய்வு நூல்களில்
இது முதல் வரிசையில் வைத்துப்
பாராட்டப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை.
அன்னைத் தமிழில் மட்டும்தான்,
உலகில் வேறெந்த மொழிகளிலும் இல்லாத
தனிப்பெரும் சிறப்பாக, எல்லாச் சமயங்களுக்கும் உரிய
காப்பியங்கள் அமைந்துள்ளன என ஆய்வறிஞர்கள் ஆய்ந்து
கண்டுள்ளனர். அவ்வகையில், கிறித்தவக் காப்பியங்கள் என்றால், பொதுவாகப் பெரும்பாலான நூலாசிரியர்கள் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம், அண்மையில் வந்த கவிஞர் கண்ணதாசனின்
இயேசு காவியம் முதலிய சிலவற்றை
மட்டுமே சுட்டி நிறுத்திக் கொள்வர்.
இது அந்நூலாசிரியர்களின் குறைவான கிறித்தவ இலக்கிய
அறிவையே வெளிப்படுத்துகிறது எனலாம். ஆனாலும் இவ்வரிய
ஆய்வு நூல், முப்பது கிறித்தவக்
காப்பியங்களை, அழகுறத் தொகுத்துக் காட்டுவதோடு,
அவற்றின் அருமை பெருமைகளை அக்கு
வேறு ஆணி வேறாகப் பகுத்தும்
வகுத்தும் தொகுத்தும் காட்டுகிறது. முப்பது காப்பியங்களை இனம்
கண்டு காட்டியது இந்நூலின் முதற் பெருமை என்றால்,
அக்காப்பியங்களை ஆய்வு பூர்வமாகவும் அறிவு
பூர்வமாகவும் வகைப்படுத்திப் பட்டியலிட்டுள்ள பாங்கு இதன் இன்னொரு
பெருமை எனலாம். வேறு எந்த
நூலாசிரியரும் செய்யாத ஒரு புதுமை
இது என்றும் சொல்லலாம். கிறித்தவக்
காப்பியங்களின் உள்ளடக்கத்தை வைத்து திருமறை
வரலாற்றுக் காப்பியங்கள், கிறிஸ்துவின் வரலாற்றுக் காப்பியங்கள், திருமறை மாந்தர் வரலாற்றுக்
காப்பியங்கள், திருமறைசாரா மாந்தர் வரலாற்றுக் காப்பியங்கள்
என்றும் காப்பியங்களின் படைப்புத் தன்மையை வைத்து தழுவல்
காப்பியங்கள் என்றும் மொழிபெயர்ப்புக் காப்பியங்கள்
என்றும் வகைப்படுத்திக் காட்டியுள்ள நூலாசிரியரின் ஆய்வு நுட்பம், உச்சி
மேல் வைத்து மெச்சிக் கொள்ளத்
தக்கதாகும்.
தமிழகத்தில் தோன்றிய காப்பியங்கள் மட்டுமன்றி,
ஈழ மண்ணில் தோன்றிய இயேசு
புராணம், நசரேய புராணம் போன்ற
காப்பியங்களையும், தமிழகப் புலவர்கள் மட்டுமன்றி
ஜெர்மன் நாட்டு இறைத்தொண்டர்
ஸ்தொஷ், இத்தாலி நாட்டு ஜோசப்
பெஸ்கி முதலிய பிறநாட்டுப் புலவர்கள்
எழுதிய காப்பியங்களையும், கத்தோலிக்க - திருத்தமுறைப் பிரிவுக் கிறித்தவப் புலவர்கள் எழுதிய காப்பியங்களை மட்டுமின்றி
கிறித்தவரல்லாதார் எழுதிய காப்பியங்களையும் ஆக
முப்பது காப்பியங்களை இந்நூல் மிக விரிவாகவும்
விளக்கமாகவும் அறிமுகப்படுத்துகிறது.
ஒவ்வொரு பிரிவின் கீழும்
அமைந்துள்ள ஒவ்வொரு காப்பியத்தையும் எடுத்துக்
கொண்டு, அதை இயற்றிய ஆசிரியரின்
வரலாறு, அவர் எழுதியுள்ள பிற
நூல்களைப் பற்றிய குறிப்பு, குறிப்பிட்ட
காவியத்தின் அமைப்புமுறை, உள்ளடக்கம், இலக்கிய நயங்கள், காப்பியத்திலுள்ள
அரிய செய்திகள், விவிலியச் செய்திகள், காப்பியத்தில் கையாளப்பட்டுள்ள புதிய உத்திகள், பிற
தமிழிலக்கியங்களின் தாக்கம் முதலிய பல
தலைப்புகளில் ஓர் உயராய்வுக்குத் தேவையான
அனைத்துச் செய்திகளையுமே அள்ளித் தந்து விடுகிறார்
ஆசிரியர்.
இவ்வாறு முப்பது காப்பியங்களைப்
பற்றி முத்து முத்தான செய்திகளை
முத்தமிழ் மாலையாகக் கோத்துக் கொடுத்துள்ளதால், மொத்தமாகக் கிறித்தவக் காப்பியங்கள் முப்பதே தான் என்று
நாம் நினைத்திடலாகாது என நமக்குத் தெளிவுறுத்தும்
வண்ணமாக, நூலின் தொடக்கத்தில் ஒரு
நான்கு பக்க முன்னுரையையும் சுமார்
இருபது பக்கங்களில் "கிறித்தவக்
காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்" என்ற
தலைப்பிலான ஒரு ஆய்வுக் கட்டுரையையும்
எழுதிச் சேர்த்திருக்கிறார். நூலுக்கு ஒரு மணிமகுடம் போல்
அமைந்துள்ள இவ்விரு கட்டுரைகளும் கிறித்தவ
இலக்கியங்களில் ஆய்வு செய்வார் எவரும்
பின்பற்ற வேண்டிய அரிய ஆய்வு
நுட்பங்களையும் ஆய்வியல் அணுகுமுறையையும் வெளிப்படுத்துவனவாக விளங்குகின்றன. ஏராளமாக உரைநடையிலும் புதுக்கவிதை
நடையிலும் காப்பியம்-காவியம் முதலிய பெயர்களைத்
தாங்கியும் தாங்காமலும் பல நூல்கள் காவியப்
போக்கில் வெளிவந்திருந்தாலும், அவற்றையெல்லாம் முழுமையான - முறையான கிறித்தவக் காப்பியங்கள்
எனத் தாம் ஏற்கவியலாமைக்குரிய வாதங்களை
ஆய்வு நோக்கில் எடுத்து வைக்கும் இக்கட்டுரை,
ஒரு தகவல் களஞ்சியமாகத் திகழ்கிறது.
இவ்வாறு, பல்வேறு தகவுகளையும் பெருமைகளையும்
தன்னுள் அடக்கி வெளிவந்திருக்கும் இவ்வரும்
பெரும் ஆய்வுப் பெட்டகம், நிகழ்கால
- எதிர்கால கிறித்தவ இலக்கிய ஆர்வலர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும்
நூலாசிரியரைக் கருவியாகக் கொண்டு இறைவன் வழங்கியுள்ள
இணையற்ற கொடை என்று சற்றும்
தயங்காது துணிந்துரைக்கலாம். இதனைப் பயன் கொள்ளுவது,
தமிழ் கற்ற ஒவ்வொருவருக்கும்
கிட்டிய பேறு.
முனைவர் மோசசு மைக்கேல் பாரடே
"இக்காலக்கட்டத்தில் அண்டிரீக்கு அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள புன்னைக்காயலைச் சேர்ந்த அந்தோனி என்பவர் சந்தந்தோனியார் அம்மானை (புனித பதுவை அந்தோனியார் அம்மானை) என்னும் நூலை எழுதினார்" என்பதிற்கு உங்களிடம் ஏதும் ஆதாரங்கள் உண்டா. நன்றி
பதிலளிநீக்கு