திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கிறித்தவக் காப்பியங்களின் தனித்தன்மைகள்


கிறித்தவ இலக்கியத்தின்  சிறப்புறு வகைமையான  காப்பியம்  காலந்தோறும் படைக்கப்பட்டு வளர்ந்து கொண்டே வருகின்றதுவீரமாமுனிவரால் காலடியெடுத்து வைக்கப்பட்டு பலராலும் வெற்றி நடை போட்டு வரும் இவ்விலக்கிய வகையானது இன்று புது வளர்ச்சி பெற்று புதுச் சாயலாய்ப் பரிணமித்துள்ளது. நவீன காலத்தில் புதுக்கவிதை வளர்ச்சி பெற்றிருந்தாலும், இன்றும் மரபிலக்கியக் காப்பியங்கள் வெளிவந்து கொண்டிருப்பது கிறித்தவக் காப்பியங்களின் தனித்தன்மைக்குச் சிறந்த உதாரணமாகக் கொள்ளலாம். பல்வேறு சிறப்புகளைக் கொண்டதாகக்  கிறித்தவக் காப்பியங்கள் படைக்கப்பட்டாலும் எல்லாவற்றிற்கும் அடிப்படை விவிலியம் என்பது குறிப்பிடத்தக்கது. விவிலியப் புலமையும் இலக்கணப் புலமையும் காப்பியப் புலமையும் இறைவனின் அருளும் கலக்கும்போது கிறித்தவக் காப்பியம் பிறக்கிறது எனலாம்.

வீரமாமுனிவரைத் தொடர்ந்து கிறித்தவ இலக்கியங்கள் படைத்தவர்களுள் அதிகமானவர்கள் தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களே. இலங்கைக் கிறித்தவர்களும் அதற்கடுத்த நிலையில் அமெரிக்கன் திருச்சபையைச் சார்ந்தவர்களும்  கிறித்தவ இலக்கியத்திற்குத் தங்கள் பங்களிப்பினை ஆற்றியுள்ளனர். தமிழ் நாட்டைச் சார்ந்தவர்களுள் தொடக்க நிலையில் குறிப்பிடத்தக்கவர் வேதநாயக சாஸ்திரியார் ஆவார். இவரது படைப்புகள் கீர்த்தனைகள் மற்றும் சிற்றிலக்கியங்களாகும். இவர் காப்பியம் படைத்திருந்தால் அது கிறித்தவ இலக்கியத்திற்கு மேலும் பெருமை சேர்த்திருக்கும் எனலாம். எனினும், இவருடைய படைப்புகளைப் பற்றி இன்னும் கிறித்தவர்கள் பெருமையுடன் பேசிக் கொள்வதும் இவரது கீர்த்தனைகளை உற்சாகத்துடன்  பாடிக் கொள்வதும் சாஸ்திரியாரின் படைப்புத் திறனுக்குக் கிடைத்த வெற்றியாகும்.

கிறித்தவக் காப்பியங்கள் பலவற்றிற்கு மேலைநாட்டு இலக்கியங்களே அடிப்படையாக இருந்துள்ளன. குறிப்பாக  கிறித்தவ இலக்கியத்தின் இரு கண்களாகப் போற்றப்படும் தேம்பாவணி, இரட்சணிய யாத்திரிகம் என்னும் இரு காப்பியங்களும் முறையே கடவுளின் நகரம், பில்கிரிம்ஸ் புராகிரஸ் என்னும் இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டன என்பது அனைவரும் அறிந்ததே. பூங்காவனப் பிரளயம் என்னும் காப்பியம் ஆங்கில மொழியில் ஜான் மில்டனால் எழுதப்பட்ட றிணீக்ஷீணீபீவீsமீ லிஷீst    என்னும் நூலின் முதலிரு பாகங்களின் மொழிபெயர்ப்பாகும். கத்தோலிக்கப் படைப்பாளர்கள் கத்தோலிக்கத் திருச்சபையினரின் விவிலியத்தை அடிப்படையாகக் கொண்டும், சீர்திருத்தச் சபையினர் பயன்படுத்தும் விவிலியத்தை ஆதாரமாகக் கொண்டு சீர்திருத்தச் சபையினரும் கிறித்தவ இலக்கியங்களைப் படைத்து வருகின்றனர். அப்படைப்பாளர்கள் அனைவரும்  தமிழ் இலக்கியங்களில் சிறப்பான புலமை உடையவர்கள் என்பதை அவர்களது படைப்புகள் வெளிக்காட்டுகின்றன.

கிறித்தவக் காப்பியங்களில் நாட்டுப் படலம் மற்றும் நகரப்படலம்  மிகக் குறைவான காப்பியங்களிலேயே இடம்பெற்றுள்ளனகுறிப்பாக தேம்பாவணி, பவுலடியார் பாவியம், அர்ச். சவேரியார் காவியம், ஞானாதிக்கராயர் காப்பியம், திருச்செல்வர் காவியம், திருத்தொண்டர் காப்பியம் ஆகிய காப்பியங்களில் மட்டுமே இடம்பெற்றுள்ளன. இவ்விரண்டு படலங்களில் வருணனை காப்பிய ஆசிரியர்களால் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. இரட்சணிய யாத்திரிகத்தில் நாட்டுப் படலம், நகரப் படலம் எனத் தனித்தனியாகப் படலங்கள் அமைக்காமல் ஆதிபருவத்தில் இடம்பெற்றுள்ள பரமராஜ்யப் படலத்திலுள்ள 66 பாடல்களிலும் நாட்டு வருணனை, நகர வருணனையைச் சிறப்பாக அமைத்துள்ளார். கிறித்தவக் காப்பியங்களில் நாட்டுப் படலம், நகரப் படலம் ஆகியவற்றில் வருணனைகள் இயல்பாக உள்ளன.

காப்பிய ஆசிரியர்கள் இயேசு கிறிஸ்துவின் வாழ்வைக்   காப்பிய வடிவில் கொடுக்க விழைந்ததின் காரணமாக, அவர்கள் கற்பனையை அதிகமாகக் கலக்க விரும்பவில்லை. சான்றாக கிறிஸ்தாயனம், திருஅவதாரம், கிறிஸ்து மான்மியம், சுவிசேட புராணம், இயேசு புராணம், நசரேய புராணம் போன்ற காப்பியங்களில் வருணனையைக் காணஇயலாது. இக்காப்பிய ஆசிரியர்கள் கற்பனையைக் கலந்தால் இயேசு பெருமானின் வாழ்வைக் கூறும் மைய நோக்கத்திலிருந்து காப்பியம் தடம் மாறிவிடும் என எண்ணியிருக்கலாம்.

காப்பியங்களில் காண்டம், படலம் என்னும் பகுப்புமுறை   பின்பற்றப்பட்டுள்ள முறை குறிப்பிடத்தக்கது. இரட்சணிய யாத்திரிகம், இயேசு புராணம் என்னும் காப்பியங்களில் காண்டம் என்பதற்குப் பதிலாகப் பருவம்  என்னும் சொல் பின்பற்றப்பட்டுள்ளது. மீட்பதிகாரம், அருளவதாரம் என்னும் காப்பியங்களில் சிலப்பதிகாரத்தைப் போன்று காண்டங்கள் காதைகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இயேசு புராணத்தில்  பருவம் சுருக்கங்களாகவும், சுருக்கம் படலங்களாகவும், படலங்கள் அடங்கன்களாகவும் பகுக்கப்பட்டுள்ளன. அருட் காவியத்தில் காண்டமானது சாரல் என்னும் பகுப்புகளால் ஆனது. கிறித்தவக் காப்பியங்களில் இயேசு புராணத்தில்   அடங்கன் என்னும் பகுப்புமுறையும்  அருட்காவியத்தில் சாரல் என்னும் பகுப்பு முறையும், சுவிசேட புராணத்தில் மூர்த்தி என்னும் பகுப்பு முறையும் பின்பற்றப்பட்டுள்ளமை  புதிய முறையாகக் காணப்படுகிறது. சில காப்பியங்கள் காண்டம் என்னும் பகுப்புமுறையின்றி படலம் என்னும் பகுப்புமுறையில் மட்டும் அமைந்துள்ளன. ஆதியாகம காவியத்தில் காண்டம் என்பதற்குப் பதிலாகப் பாகம் என்னும் முறை பின்பற்றப்பட்டுள்ளது.

வீரமாமுனிவர் தொடங்கி சாமிமுத்து வரையுள்ள காப்பியக் கவிஞர்கள் தமிழ் இலக்கியங்களில் நல்ல புலமை மிக்கவர்களாக விளங்கினர் என்பதை அவர்களது படைப்புகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிகிறது. குறிப்பாக திருக்குறள், சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, கம்பராமாயணம், தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யபிரபந்தம், திருவருட்பா ஆகிய நூல்களில்  மிக்க புலமை உடையவர்களாக விளங்கினர். தேம்பாவணியிலும் இரட்சணிய யாத்திரிகத்திலும் கம்பராமாயணத்தின் தாக்கம் அதிகமாகவே காணப்படுகிறது. இரட்சணிய யாத்திரிகத்தில் சுமார் எழுபது இடங்களிலும்   திருத்தொண்டர் காப்பியத்தில் சுமார் தொண்ணூற்றைந்து இடங்களிலும் திருக்குறளின் தாக்கம் உள்ளது.  
  
தேம்பாவணியில் சில இடங்களிலும்  இரட்சணிய யாத்திரிகத்தில்  இருபத்தைந்திற்கும் மேற்பட்ட இடங்களிலும் திருத்தொண்டர் காப்பியத்தில் இருநூற்றைம்பதிற்கும் மேற்பட்ட இடங்களிலும்     பழமொழிகள் இடம்பெற்றுள்ளன. பிற கிறித்தவக் காப்பியங்களில் பழமொழிகளைப் பயன்படுத்தியிருப்பது மிகக் குறைவாகவே உள்ளது. காப்பிய ஆசிரியர்கள் பழமொழிகளைப் போன்று உவமைகளையும் அதிகமாகக் கையாண்டுள்ளனர். திருத்தொண்டர் காப்பியத்தில் சூ. இன்னாசி ஏறத்தாழ 2000 உவமைகளைப் பயன்படுத்தியுள்ளார்.

காப்பியங்களில் கிளைக்கதைகள்  இடம்பெறுவது காப்பியத்தின் தனிச் சிறப்பாகும். தேம்பாவணி, ஞானாதிக்கராயர் காப்பியம், திருச்செல்வர் காவியம்திருத்தொண்டர் காப்பியம் ஆகியவற்றில் கிளைக்கதைகள் இடம்பெற்றுள்ளன. இக்கிளைக் கதைகள் காப்பிய வளர்ச்சிக்குப் பெரிதும் பயனளிப்பன. தேம்பாவணியைத் தவிர்த்துள்ள பிற காப்பியங்களில் இயேசு கிறிஸ்துவின் வரலாறு கிளைக்கதையாக இடம்பெற்றுள்ளது. ஆனால் தேம்பாவணியில் மட்டும் பழைய ஏற்பாட்டிலுள்ள  மோயீசன் கதை, சேதையோன் கதை, ஆணரன் கதை, சஞ்சோன் கதை ஆகியன  கிளைக்கதைகளாக உள்ளன.

இயேசு கிறிஸ்துவின் வரலாறு பாலஸ்தீன நாட்டில் நடந்தது. எனினும் அவரது வாழ்வை தமிழ்க் கவிஞர்கள் காப்பியமாகப் படைக்கும் போது தமிழ் மரபிலிருந்து மாறாமல் தமிழ் நாட்டின் மண்ணின் மணம் மாறாமல் உருவாக்குகின்றனர். பாலஸ்தீன நாட்டில் நடந்த நிகழ்வுகளைக் கூறும் போது தமிழகத்தில் நடந்தது போன்ற உணர்வினை ஆசிரியர் கொணர்வது, அவரது இலக்கியப் படைப்பின் சிறப்பினை எடுத்துக் காட்டுகிறது. இரட்சகராகிய இயேசுநாதர் என்னும் காப்பியத்தில் நாசரேத்துக்கும் எருசலேமுக்கும் இடையிலுள்ள வழியின் இயல்புகளை விளக்கும்போது, தமிழகத்திலுள்ள கிராமங்களுக்கு நடுவிலுள்ள வழிகளை வருணிப்பது போன்ற தோற்றத்தைக் கொடுக்கும் அளவிற்கு தமிழ் மரபிலிருந்து மாறாமல் காப்பிய ஆசிரியர்கள் படைக்கின்றனர்.

கிறித்தவக் காப்பியக் கவிஞர்கள் கவித்துவம் நிறைந்தவர்களாகக் காணப்படுகின்றனர். இவர்களது கவிதைகள் சொல்லாட்சி மிக்கனவாகவும் அணிநயங்கள் நிறைந்தனவாகவும் எதுகை, மோனை நயம் உள்ளனவாகவும் இலக்கண நயம் கொண்டனவாகவும் காணப்படுகின்றனஇச்சிறப்பியல்புகள் நிறைந்த கவிதைகள் உடைய காப்பியம் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெறுவது இயல்பான ஒன்று.

இத்தகைய பல்வேறு சிறப்புகளுடன் பல்வேறு தன்மைகளில் கிறித்தவக் காப்பியம் படைக்கப்பட அடிப்படையானது விவிலியமாகும். விவிலியத்தைக் கசடறக் கற்றவர்கள் தான் கிறித்தவ இலக்கியங்கள் படைக்க முடியும். கிறித்தவக் காப்பியக் கவிஞர்கள் அனைவரும் விவிலியத்தில் புலமை மிக்கவர்கள் என்பதை அவர்களது படைப்புகளின் வாயிலாக அறியலாம். இக்கவிஞர்களுள் சிலர் விவிலியம் முழுவதையும் அடிப்படையாகக் கொண்டு காப்பியமும் சிலர் புதிய ஏற்பாடு முழுவதின் அடிப்படையில் காப்பியமும் சிலர் புதிய ஏற்பாடிலுள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களின் அடிப்படையில் காப்பியங்களும், சிலர் விவிலியத்தில் இடம்பெற்றுள்ள ஏதாவது ஒருவரை அடிப்படையாகக் கொண்டு காப்பியமும் படைத்துள்ளனர்.

கிறித்தவக் காப்பியங்களில் பல இன்று நம் கைகளில் கிடைக்கவில்லை என்பது வருத்தத்திற்குரியதே. அத்தகைய காப்பியங்கள் கண்டுபிடிக்கப்பட்டு மறுபதிப்பு செய்யப்பட்டால்  கிறித்தவ இலக்கிய வரிசையில் காப்பியங்களின் உயர்வினை அறியமுடியும். கிறித்தவக் காப்பியம் மட்டுமன்றி ஏராளமானக் கிறித்தவச் சிற்றிலக்கியங்களும் இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமல் போய்விடும் அபாய நிலையில் உள்ளது. இவைகளையெல்லாம் தேடிக் கண்டுபிடித்து பதிப்பிக்கும் போது கிறித்தவ இலக்கியத்தின் பெருமை மட்டுமன்றி தமிழ் இலக்கிய வரலாற்றின் சிறப்பினையும் பரப்பினையும் அனைவரும் தெரிந்துகொள்ளலாம் என்பதில் ஐயமில்லை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக