திங்கள், 11 ஆகஸ்ட், 2014

கிறிஸ்து மான்மியம்


சீர்திருத்தச் சபையைச் சார்ந்த மேலைநாட்டு கிறித்தவ சமயத் தொண்டர்கள் இருவர் தமிழில் காப்பியம் படைத்துள்ளனர். இக்காப்பியங்களின் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதைக் காட்டிலும் அவர்களது முயற்சியைப் பாராட்டுவது இன்றியமையாதது. கிறிஸ்து மான்மியம் என்னும் கிறித்தவக் காப்பியம் ஜெர்மன் நாட்டு இறைத்தொண்டர் அருள்திரு. ஸ்தொஷ் (Rev. Stosch) முயற்சியால்  வெளிவந்தது.

ஆசிரியர் வரலாறு

அருள்திரு. ஸ்தொஷ்  1851 ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் நாள் பான்சென் என்னும் ஊரில் பிறந்தார். இறையியல் கல்விக்குப் பின்னர் 1876 ஆம் ஆண்டு அக்டோபர் பத்தாம் நாள் குருப் பட்டம் பெற்றார். 1888 ஆம் ஆண்டு அக்டோபர் பன்னிரண்டாம் நாள் மிஷனெரியாக இந்தியாவிற்கு அனுப்பப்பட்டார். இவர் தரங்கம்பாடியிலிருந்த அச்சகத்தின் மேலாளராகப்   பணிபுரிந்தார். அருள்திரு. ஸ்தொஷ் தமிழகத்தில் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து இறைத் தொண்டு செய்தார்இவர் தரங்கன்பாடி லுத்தரன் மிஷன் அச்சகத்தின் மூலம் 1891 ஆம் ஆண்டு கிறிஸ்து மான்மியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை வெளியிட்டார்.  

நூல் பகுப்பு

கிறிஸ்து மான்மியம் என்னும் காப்பியம்  காண்டங்கள் என்னும் பெரும் பகுப்பு இல்லாமல் சருக்கம் என்னும் வகையிலான சிறு பகுப்புகளை மட்டுமே கொண்டுள்ளதுஇக்காப்பியத்தில் தேவதூதன் கன்னிமரியாளிடம் வந்த சருக்கம் முதல் பரமண்டலமேறிய சருக்கம் ஈறாக 39 சருக்கங்கள் உள்ளனஇயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றினை விவரிக்கும் இந்நூல்   583 விருத்தப்பாக்களினால்  ஆனதுஇயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தபின் மகதலேனா மரியாளுக்குக் காட்சி கொடுத்ததையும் எம்மாவூரில் இருவருக்குக் காட்சி கொடுத்ததையும் சீடர்களுக்கும் தோமாவுக்கும் காட்சி கொடுத்ததையும் தீபேரியாக் கடற்கரையில் காட்சி கொடுத்ததையும்  ஆசிரியர் தனித்தனிச் சருக்கங்களாக அமைத்து, இறுதியில் பரமண்டலமேறிய சருக்கத்துடன் நூலை முடித்துள்ளார். இந்நூலில் எவ்வித வருணனைகளும் உவமை நயங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றைச் செய்யுள் வடிவில் இந்நூல் கொடுக்கின்றது.

சருக்கங்கள்

கிறிஸ்து மான்மியம்  39 சருக்கங்களால் பகுக்கப்பட்டுள்ளது. அச்சருக்கங்கள் தேவதூதன் கன்னிமரியாளிடம் வந்த சருக்கம், கிறிஸ்து திருவவதாரச் சருக்கம், விருத்தசேதனச் சருக்கம்,சாஸ்திரிகள் வந்த சருக்கம், பன்னிரண்டாவது வயதில் தேவாலயம் சென்ற சருக்கம், ஞானஸ்நானச் சருக்கம், பிசாசு சோதனைச் சருக்கம், நிக்கோதேமுச் சருக்கம், தண்ணீரை திராட்ச ரசமாக்கிய சருக்கம், சமாரியப் பெண் சருக்கம், காற்றையு கடலையு மடக்கிய சருக்கம், திமிர்வாதந் தீர்ந்த சருக்கம், யவீரு மகளை யெழுப்பிய சருக்கம், விதவை மகனையுயிர்ப்பித்த சருக்கம், அய்யாயிரருக் குணவளித்த சருக்கம், அறிவுணர்த்திய சருக்கம், பிறவிக் குருடன் கண் பெற்ற சருக்கம், சமாரியன் சருக்கம், கெட்டுத் தேறினவன் சருக்கம், இலாசரு சருக்கம், குஷ்டரோகர் குணப்பட்ட சருக்கம், வேற்றுருவடைந்த சருக்கம், எருசலேஞ் சென்ற சருக்கம், அடக்கப்பட்ட விலாசரு வெழுந்த சருக்கம், கடைசி நாளில் கிறிஸ்து வருவாரென்ற சருக்கம், மரணத்தோடு போர் செய்த சருக்கம், காட்டிவிட்ட சருக்கம், ஆசாரியன் முன்னே பாடுபட்ட சருக்கம், பிலாத்துக்கு மெரோதேயுக்குமுன் பாடுபட்ட சருக்கம், ஆக்கினைத் தீர்ப்புச் சருக்கம், சிலுவையிலறையுண்ட சருக்கம், மரணமடைந்த சருக்கம், அடக்கப்பட்ட சருக்கம், உயிரோடெழுந்த சருக்கம், மக்தலாவூர் மரியாள் கண்ட சருக்கம், எம்மவிலிருவர் கண்ட சருக்கம், சீடர்களுந் தோமாவுங் கண்ட சருக்கம், தீபேரியாக் கடற்கரையில் கண்ட சருக்கம், பரமண்டல மேறிய சருக்கம் என்பவைகளாகும். இச்சருக்கங்கள் குறைந்தது ஏழு பாடல்களையும் அதிகமாக 32 பாடல்களையும் கொண்டுள்ளன.

பிறவிக் குருடன் கண்பெற்ற சருக்கம்

பிறவிக் குருடன் கண்பெற்ற சருக்கம் என்னும் பதினெட்டாவது சருக்கம் 32 பாடல்களை உடையது. பிறவிக் குருடனின் கண்களில் உமிழ் நீர் கலந்து மண்ணை இயேசு கிறிஸ்து பூசியபின் அவரது சொற்படி அவன் சீலோவாம் குளத்தில் சென்று கண்களைக் கழுவிப் பார்வை பெற்று மகிழ்ச்சியடைந்ததைக் கீழ்க்காணும் பாடல்களின்  மூலம் ஆசிரியர் வெளிப்படுத்துகிறார்:

வாயினுமிழ்நீரை யொரு மண்டரை யுமிழ்ந்தா
ராயவதனாலளறு செய்ததை யெடுத்தார்
தூயபிறவிக் குருடனோக்கிடை துமித்தார்
போயி சிலொவாங் குளம்புகுந்து கழுவென்றார்.

பெற்றவர்கண் மற்றவர்கள் பெற்றவிரு கண்ணா
வுற்றவர்களாற் புவியிலுள்ள வைகளோர் வான்
பற்றுமொரு கோல் கைகொடுபார் மிசைநடப்பான்
சற்றுமதியாமலே சரேரென வெழுந்தான்.

மண்ணதனை வாரியிரு கண்ணினிடையிட்ட
வண்ணலது சொற்படியடைந்து கழுவுங்கால்
விண்ணுலகு மண்ணுலகு மேன்மைசெய் கிறிஸ்தைப்
பெண்ணொருவள் பெற்றுபெறு பேருவகை பெற்றான்.
                                                                  (பிறவிக் குருடன் கண்பெற்ற சருக்கம், பா. 7-9)

எளிமையான கவிதை அடிகளுக்குத் தக்க சான்றாக இப்பகுதி அமைந்துள்ளது.

கவிதையாக்கம்

விவிலியத்திலுள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இக்காப்பியம் இந்நூல்களிலுள்ள செய்திகளைச் சுருக்கமாகத் தருகிறது. லூக்கா எழுதிய நற்செய்தி நூலிலுள்ள " தேவதூதன் அவளை நோக்கி: மரியாளே, பயப்படாதே; நீ தேவனிடத்தில் கிருபை பெற்றாய். இதோ, நீ கற்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பெயரிடுவாயாக. அவர் பெரியவராயிருப்பார், உன்னதமானவருடைய குமாரன் என்னப்படுவார்; கர்த்தராகிய தேவன் அவருடைய பிதாவாகிய தாவீதின் சிங்காசனத்தை அவருக்குக் கொடுப்பார்" (லூக்கா 1:30-32) என்னும் வசனங்களை,

அத்தருணத்தவன் மரியாளே நீ யஞ்சாதே
கர்த்தர் கிருபை பெற்றாயிதோ நீ கர்ப்பங் கொண்டோர்
புத்திரனைப் பெற்றேசுவெனப் பேர் புகல்வாயவ்
வுத்தமராய வருன்னத மானவரோர் சேயே

என்னப்படுவார் பரம பிதாவே யேசுப்பே
ரன்னவருக்குத் தாவிதிராசாசன மீவார்
மன்னவராயவர் யாகோபின் குலவழியாள்
முன்னவ ராசாங்கத்துக்கோர் முடிவிலை யென்றான்
                                                     (தேவதூதன் கன்னிமரியாளிடம் வந்த சருக்கம், பா. 7, 8)

எனக்   கவிதையாக மாற்றம் செய்கிறார். மேலும் "ஒரு மனுஷனுக்கு நூறு ஆடுகளிருக்க, அவைகளில் ஒன்று சிதறிப்போனால், அவன் மற்றத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைகளில் விட்டுப்போய்ச் சிதறிப்போனதைத் தேடாமலிருப்பானோ? அவன் அதைக் கண்டுபிடித்தால், சிதறிப்போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைக் குறித்துச் சந்தோஷப்படுகிறதைப் பார்க்கிலும், அதைக் குறித்து அதிகமாய்ச் சந்தோஷப்படுவான் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். இவ்விதமாக, இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப் போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல" (மத்தேயு, 18: 12-14) என்னும் வசனங்களை,

உங்களிலோர் மனிதனூ றாடுகளை யுடையானேற்
றங்கவைகட மினொன்றுதான் காணாதோடி விட்டா
லங்கவை தொண்ணூற் றொன்ப தாட்டை வனாந்தரம் விட்டே
யெங்கணிலு மோராட்டைக் காணளவு மேகானோ

கண்டுபிடித்த தன்பின்பு களிப்புடனே தன்றோண்மேற்
கொண்டு வீடெய்திச் சினேக ரயலகத்த ரைக்கூய்ப்
பண்டுகாணா வென்றனாட்டை யான்பற்றி வந்தே
னண்டிய நீரென்போ லானந்திப்பீ ரென்கானோ

ஈதுபோலொ ருபாவியினைத் தேடியிவனுக்குச்
சேதமிகப் படர்பாசியொ துக்கி நீர்தேறுவன்போற்
போதமறி யறிவுவரப் புரிந்தளவிலா மகிமை
நீதிகொள் பராபரனை நேசிக்கும்படிச் செய்தல்
                                                                  (கெட்டுத் தேறினவன் சருக்கம், பா. 2-4)

எனப் பாடுகிறார். இயேசு கிறிஸ்து சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கும் போது சொல்லிய ஏழு வார்த்தைகளுள் இறுதி வார்த்தையை லூக்கா என்னும் நற்செய்தி நூல்  "இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்" (லூக்கா 23: 46) எனக் குறிப்பிடுகின்றது. இவ்வசனத்தை ஸ்தொஷ் போதகர்,

ஓவென்றே பிதாவே யுங்கையிலென்
னாவியை யொப்பிக்கின்றே னென்றார்த் தென்றுஞ்
சாவிலா வேசுவுந் தலையைச் சாய்த்துத்தஞ்
சீவனை விட்டனர் திரும்ப வல்லவர் 
                (மரணமடைந்த சருக்கம், பா. 18)

என்னும் பாடலாகப் பாடுகிறார்.


கிறிஸ்து மான்மியம் என்னும் நூலை ஸ்தொஷ் போதகர் எழுதவில்லை என்றும் இயேசு கிறிஸ்துவைப் பற்றி தமிழ்ப் புலவர் ஒருவரிடம் சொல்லி எழுத வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் நூலில் பிறமதத்தைச் சார்ந்த அப்புலவரின் பெயரைப் போடாமல் நூல் எழுதக் காரணமான ஸ்தொஷ்  போதகரின் பெயரை நூலில் அச்சிட்டிருக்கலாம் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இக்கருத்து எவ்வளவு உண்மை எனத் தெரியவில்லை. எனினும், கிறிஸ்து மான்மியம் என்னும் கிறித்தவக் காப்பியம் தமிழ் இலக்கியத்திற்குக் கிடைத்தது பாராட்டுதலுக்குரியதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக