புதன், 6 ஆகஸ்ட், 2014

கிறித்தவ இலக்கிய வளம்

உலக இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் பன்னிரு சீடர்களுள் ஒருவரான புனித தோமையர்,    தமிழகத்தின் ஒரு பகுதியாக விளங்கிய சேரநாட்டிலுள்ள கொடுங்கல்லூர் என்னுமிடத்தில் கடல் வழியாக கி.பி. 52 ஆம் ஆண்டு வந்திறங்கினார். இன்றைய கேரளப் பகுதியான அன்றைய சேரநாட்டில் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் அவருடைய கொள்கைகளைப் பற்றியும் சுமார் ஏழு ஆண்டுகளாகப் பரப்பி கொடுங்கல்லூருக்குப்  பக்கத்திலுள்ள மாலியங்கரை, கரிக்கோணியின் பக்கத்திலுள்ள கொல்லம், வடக்கன் பறவூரின் பக்கத்திலுள்ள கொக்கமங்கலம், கொட்டக்காவுநிரணம், பாலையூர்  , சாயல் என்னும் இடங்களில் தேவாலயங்களைக் கட்டினார். பின்னர் இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவிதாங்கோடு என்னும் ஊரில் ஆலயம் ஒன்று கட்டினார். அவ்வாலயப்பணி முடிவுறாத நிலையில் கடல் வழியாக சென்னையிலுள்ள மயிலாப்பூர் வந்தடைந்தார். திருவிதாங்கோட்டிலுள்ள ஆலயம் அவரது காலத்தில் முடிவுறாததால் இன்றும் அவ்வாலயத்தை அரைப்பள்ளி என்றே அழைக்கின்றனர். இது இன்றைய தமிழகத்தின் முதல் தேவாலயமாகும். இவ்வாலயம் 25 அடி நீளமும் 15 அடி அகலமும் 10 அடி உயரமும் உடையது. இவ்வாலயம் முழுவதும் கருங்கல்லால் கட்டப்பட்டது. பின்னர் இவ்வாலயத்தை முழுமையாகக் கட்டி முடித்தனர். போர்த்துக்கீசியர்கள் இவ்வாலயத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இவ்வாலயம் தற்போது மலங்கரா பாரம்பரிய சிரியன் திருச்சபையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ஆலயத்தையும் சேர்த்து ஏழரைக் கோயில்களைத் தோமையர் கட்டினார் என்னும் கருத்து இன்றும் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது.

புனித தோமையர் மயிலாப்பூர் பகுதிகளில் மக்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றி உபதேசம் செய்தார். இதனால் பலர் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டனர். சைதாப்பேட்டைக்கு அருகிலுள்ள சின்னமலைக் குகையில் அடிக்கடி தங்கியிருந்தார். அதே காலத்தில் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்த திருவள்ளுவரும் தோமையரும் நண்பர்களாக விளங்கினர்  என்னும் நம்பிக்கை இன்றும் மக்களிடம் காணப்படுகிறது. இதை ஆதாரமாகக் கொண்டு நாவலாசிரியர் .நா. சுப்பிரமணியம் அவர்கள் "தாமஸ் வந்தார்" என்னும் நாவலை எழுதியுள்ளார். தோமையரின் மேல் வெறுப்புக் கொண்ட கொலைப்பாதகன் ஒருவன்,    புனித தோமையர் மலை என இன்று அனைவராலும் அழைக்கப்படும் மலையில் தோமையர் ஷெபம் செய்து கொண்டிருக்கும்போது முதுகில் ஈட்டியால் குத்திக் கொலை செய்தான். பின்னர் அவரது உடல்  இன்று சாந்தோம் ஆலயம் இருக்கும் இடத்தில்    அடக்கம் செய்யப்பட்டது. மயிலாப்பூரில் தோமையர் கட்டிய ஆலயத்தில் அவரது உடலை  அடக்கம் பண்ணினர் என்னும் கருத்தும் உண்டு.

கி.பி. 250 ஆம் ஆண்டு சிரியா நாட்டில் எழுதப்பட்ட அருள் தொண்டரின் அருளுரைகள் என்னும் நூல் தோமையர் தமிழகத்தில் ஆற்றிய பணிகளைக் குறிப்பிடுகின்றது.   இசுபியஸ் என்பவர் இந்தியாவிலுள்ள கிறித்தவர்களிடம் எபிரேய மொழியில் மத்தேயு எழுதிய நற்செய்தி நூலின் நகல் ஒன்று இருந்ததாகவும், அந்நகல் இயேசு கிறிஸ்துவின் பன்னிருசீடர்களுள் ஒருவரான பர்த்தலோமேயு விட்டுப்போனதாகக் கூறப்படுவதாகவும்   குறிப்பிட்டுள்ளார். இவர் மேலும் தமது நூலில் 190 ஆம் ஆண்டிற்கு முன்னர் அலெக்சாண்டிரியா நாட்டைச் சார்ந்த பாண்டேனஸ் இந்தியாவிற்கு வருகை புரிந்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

 புனிதர் பர்த்தலோமேயுவின்  இந்திய அருட்பணி குறித்து இரண்டு பழைய சான்றுரைகள் உள்ளன. அவை நான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த செசரியாவின் யூசிபியஸ்  உடையதும் நான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த புனிதர்  ஜெரோம் உடையதும் ஆகும். இரண்டாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்ததாகக் கூறப்படும் பாண்டேனசது வருகை பற்றிப் பேசும்போது இந்த மரபுவழிச் செய்தி பற்றி இவை கூறுகின்றனஅருட்தந்தை .சி. பெருமாலில்  மற்றும் மொரோஸ் ஆகியோரது ஆய்வுகள், பழைய கல்யாண் பட்டணம் என்று அறியப்பட்டிருக்கக்கூடிய பகுதியாகிய கொங்கணக்கரையின் மும்பைப் பகுதிதான் புனிதர் பர்த்தலோமேயுவின் அருட்பணி நிகழ்வுகளுக்குக் களமாய் அமைந்ததாகக் கூறுகின்றன.

 சுமார் 295-300 ஆம் ஆண்டுகளுக்கிடையில் மொசபொத்தோமியாவிலுள்ள கண்காணியர் டூடி என்ற தாவீது என்பவர்  இந்தியாவிற்கு வருகை புரிந்து நற்செய்தியை அறிவித்தார் என ஆதாரபூர்வமானக் குறிப்பு காணப்படுகிறது. அலெக்சாண்டிரியா நாட்டைச் சார்ந்த காஸ்மாஸ் என்னும் கிறித்தவ வணிகர் கி.பி. 522 ஆம் ஆண்டில் இந்தியாவிலுள்ள சேரநாட்டில் கிறித்தவர்கள் இருந்தது பற்றித் தமது "உலகெங்கும் உள்ள கிறித்தவ உறைவிடங்கள்" என்னும் நூலில் எழுதியுள்ளார். அகழ்வாய்வின்போது எட்டு அல்லது ஒன்பதாம் நூற்றாண்டுகளில் பயன்படுத்தப்பட்ட கல்லில் செதுக்கப்பட்ட சிலுவைகள் தோமையர் மலை, கோட்டயம், மைசூரிலுள்ள கோலார் என்னும் இடங்களில் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சிலுவைகள் அனைத்தும் ஒரே மாதிரியானவை. இச்சிலுவைகள் பீடத்தின் மேலுள்ளன. மேல்பகுதியிலிருந்து புறா இறங்கி வருவது போன்று உள்ளது. இவற்றைச் சுற்றி ஓர் ஒளி வட்டம் இருப்பது போல் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வளைவில் பாலி மொழியில் எழுதப்பட்டுள்ளது. மேலும் இச் சிலுவையில் சிரியக் மொழியில்  "நானோ நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையைப் பற்றியே அல்லாமல் வேறொன்றையும் பற்றி ஒருக்காலும் பெருமை பாராட்டாதிருப்பேனாக" என்னும் கலாத்தியர் ஆறாம் அதிகாரத்திலுள்ள பதிநான்காம் வசனம் பொறிக்கப்பட்டுள்ளது. தியோடர் என்பவர் பிரான்ஸ் நாட்டிலுள்ள கிரகரி என்னும் கண்காணியாரிடம் தோமையர் அடக்கம் பண்ணப்பட்ட இடத்தில் ஓர் ஆலயத்தையும் மடத்தையும் பாஈர்த்ததாகக் கூறியுள்ளார். இச்செய்தியை கிரகரி என்பவர் கி.பி. 590 இல் எழுதியுள்ளார். இவற்றை ஆதாரமாகக் கொண்டு தமிழகத்தில் அக்காலத்தில் கிறித்தவர்கள் வாழ்ந்து வந்தனர் என்று உறுதி செய்துள்ளனர்.

தோமையர் அடக்கம் பண்ணப்பட்ட இடத்தை ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வருகை தந்த அர்மீனியர்கள் கண்டுபிடித்து அவ்விடத்தில் ஓர் ஆலயத்தைக் கட்டினர் என்னும் செய்தியும் உள்ளது. இந்தியாவிற்கு வருகை தந்த அர்மீனியர்கள் பெர்ஜியா(ஈரான்), அர்மேனியா(ஈராக்) மற்றும் மெசபடோமியா நாட்டைச் சார்ந்தவர்களாவர்.   இன்றும் சென்னையிலுள்ள உயர்நீதிமன்றத்தின் எதிர்திசையில் உள்ள அர்மீனியன் தெருவில் அர்மீனியர்களால் 1772 ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஆலயம் உள்ளது. இவ்வாலயத்தின் மணிக்கோபுரத்தில் ஆறு மணிகள் உள்ளன. சென்னையிலுள்ள ஆலய மணிகளில் இம்மணிகளே அளவில் பெரியதும் எடையில் அதிகமானதுமாகும்.

மார்க்கோபோலோ  என்னும் வெனீசிய பயணி 1288 இலும் 1292 இலும் வந்தார். அவர்  தமது பயணத்தின்போது தோமையரின் கல்லறையைக் கண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.   மார்க்கோபோலோ 24 ஆண்டுகளாகப் பல பல நாடுகளில் பயணம் செய்து 24000 கிலோ மீட்டர் தூரத்தைக் கடந்துள்ளார். மத்திய ஐரோப்பாவின் மிகப் பிரபலமான நூல்களில் ஒன்றாக மார்க்கோபோலோவின் நூல் காணப்பட்டது. அமெரிக்காவைக் கண்டுபிடித்ததாகப் புகழப்படும் கிறிஸ்டோபர் கொலம்பஸ் இந்நூலின் பிரதி ஒன்றினை வைத்திருந்தார்.
பல நூற்றாண்டுகளாகக் கடல் வழி மறந்து போனமையினால் இந்தியாவிற்கு வருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே காணப்பட்டது. பருவக்காற்று வீசும் மாதங்களையும் கடல் வழிகளையும் தெரிந்தவர்களால் மட்டுமே அக்காலத்தில் பயணம் செய்ய முடியும். மேலும் அக்காலத்தில் கடல் பயணம் என்பது மிகவும் துன்பமயமானது. இத்தகைய சூழலில் போர்ச்சுக்கீசிய நாட்டைச் சேர்ந்த வாஸ்கோட காமா என்பவர் இந்தியாவிற்கான கடல்வழியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் நோக்கத்தில் லிஸ்பன் என்னும் துறைமுகத்திலிருந்து 1497 ஆம் ஆண்டு ஷூலை 18 ஆம் நாள் தமது பயணத்தை மேற்கொண்டார். பல்வேறு தடைகளுக்குப் பின்னர் 1498 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் கள்ளிக்கோட்டை (கோழிக்கோடு) துறைமுகத்தை அடைந்தார். வாஸ்கோடகாமா மூன்றாவது முறை வருகையின்போது கொச்சியில் வைத்து 1524 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் மரணம் அடைந்தார்வாஸ்கோடகாமாவால் கொச்சியில் கட்டப்பட்ட ஆலயத்தில் அவர் அடக்கம் பண்ணப்பட்டார். பின்னர் அவரது மகன் கொச்சி வந்தடைந்து, அவரது எலும்புகளை எடுத்துக் கொண்டு சென்று தமது நாட்டில் அடக்கம் செய்தார். வாஸ்கோடகாமா இந்தியாவிற்குக் கடல்வழியைக் கண்டுபிடித்ததால் அதன் பின்னர் அவ்வழியைப் பயன்படுத்திப் பல்வேறு நாட்டு இறைத்தொண்டர்களும், பயணிகளும், வணிகர்களும் இந்தியாவிற்கு வரத் தொடங்கினர். இவர்களது வருகையினால் இந்தியா, குறிப்பாக, தமிழகம் சொல்லி முடியாத பல்வேறு வளர்ச்சிகளைப் பெற்றது.

போர்ச்சுக்கீசியர்கள் கேரளம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில்   வியாபாரம் மற்றும் சமயப்பணி செய்து வந்தனர். இவர்கள் குறிப்பாக கன்னியாகுமரி முதல் வேம்பார் வரையிலுள்ள முத்துக்குளித்துறையினைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். முத்துக்குளித்துறையின் தலைமையிடமாகத் தூத்துக்குடி விளங்கியது.    பதினாறாம் நூற்றாண்டில் போர்ச்சுக்கீசியர்கள் மயிலாப்பூரிலுள்ள புனித தோமையாரின் கல்லறை இருந்த இடத்தில் ஓர் ஆலயத்தைப் புதிதாகக்  கட்டினர். காலப்போக்கில் அவ்வாலயம் அழியத் தொடங்கியது. தற்போதுள்ள சாந்தோம் ஆலயம் 1893 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் கட்ட ஆரம்பிக்கப்பட்டது.  

ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த இயேசு சபைத்துறவி  புனித பிரான்சிஸ் சவேரியார் (1506-1552) என்பவர் இந்தியாவில் இறைப்பணியாற்றுவதற்காக  1542 மே மாதம் 6 ஆம் நாள் கோவா வந்தடைந்தார். முதல் நான்கு மாதங்கள் கோவாவிலும் பின்னர் தென் இந்தியாவில் குறிப்பாகத் தமிழகக் கடற்கரைக் கிராமங்களிலும் தமது இறைப்பணியைச் செய்தார். முதலில் தூத்துக்குடியை அடுத்துள்ள பழையகாயல் என்னும் இடத்தில் இறைப்பணியாற்றினார். 1543 ஆம் ஆண்டு   கன்னியாகுமரி மாவட்டத்தில் தம் இறைப்பணியைத்  தொடர்ந்தார். சுமார் பதினைந்து மாதங்கள்  இப்பகுதியிலுள்ள கிராமங்கள் தோறும் மணியடித்தபடி சென்று அங்கு ஆட்கள் கூடியதும் அவர்களுக்கு இயேசு கிறிஸ்துவைப் பற்றிய செய்திகளைக் கூறியும் நோயாளிகளைச் சந்தித்தும் வந்தார்.    குமரி மாவட்டத்திலுள்ள கோட்டாறு என்னும் இடத்தில்  புனித சவேரியார் ஆலயம் ஒன்று கட்டினார்.   திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள மணப்பாடு என்னும் இடத்தில் அவர் தங்கியிருந்த குகை, மற்றும் அதற்குள் இருக்கும் சிறிய கிணறு ஆகியன இன்றும் உள்ளன. அந்தக் கிணறு கடற்கரையில் உள்ளது. ஆனால் அதன்  தண்ணீர் உப்புத் தன்மை இல்லாத நல்ல குடிநீராக இன்றும் புதுமையாகக் காணப்படுகின்றது
  
புனித சவேரியார் சுமார் 38000 மைல்கள் கடல் மற்றும் தரை  வழியாகப் பயணம் செய்து இறைப்பணியாற்றினார்காயல்பட்டினம், தூத்துக்குடி, மணப்பாடு, திருவிதாங்கூர்  தேசம், கோவளம், யாழ்ப்பாணம், மன்னார்,   மயிலாப்பூர், மலாக்கா தீவு, ஜப்பான், காங்கோசிமா தீவு, பீரந்தோ நகர், அமங்குஷி நகர், மெய்யாக்கோ நகர், பொங்கோ நகர்,     சஞ்சியான் தீவு என்னும்  பல இடங்களுக்கு, நாடுகளுக்கு, தீவுகளுக்குச் சென்று இறைப்பணி செய்தார். இறுதியாக சஞ்சியான்  தீவில்   நோயால் பாதிக்கப்பட்டார்புனித சவேரியார் 1552 ஆம்  ஆண்டு டிசம்பர் இரண்டாம் நாள் மரணமடைந்தார்.   கோவா அரசாங்கத்தின் உதவியுடன்    சுமார் 460 ஆண்டுகள் கழிந்த   பின்னரும்   இப்புனிதரின் உடல் இன்றும் மக்கள் பார்க்கும்படியாகவே காணப்படுகின்றது.

போர்ச்சுக்கீசியர்களைத் தொடர்ந்து டச்சுக்காரர்கள் தமிழகத்திற்கு வந்தனர். 1609 ஆம் ஆண்டு சென்னைக்கு அருகிலுள்ள பழவேற்காடு (புலிக்கட்) என்னுமிடத்தில் டச்சுக்காரர்கள் கோட்டையைக் கட்டினர். இந்தியாவுடன் வாணிகம் செய்யும் நோக்கத்துடன் 1616 இல் டச்சுக் கிழக்கிந்திய கம்பெனி உருவானது. 1620 இல் தரங்கம்பாடியில் ஒரு தொழிற்சாலையைத் தொடங்கினர். இவர்களைத் தொடர்ந்து 1625 இல்   ஆங்கிலேயர்கள் தமிழகத்திற்கு வருகை புரிந்தனர். ஆங்கிலேயர்களைத் தொடர்ந்து பிரெஞ்சுக்காரர்கள் புதுச்சேரிப் பகுதியில் வந்து காலடி பதித்தனர். போர்ச்சுக்கீசியர்கள், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர்கள், பிரெஞ்சுக்காரர்கள் ஆகிய நான்கு வகையினரும் தமிழகத்தில் வாணிபம் செய்வது அவர்களது கொள்கையாக இருப்பினும் சமயம் மற்றும் சமூகப் பணி அவர்களது மைய நோக்கமாகவும் செயல்பாடாகவும் இருந்தது மறுக்கமுடியாத உண்மை.

இந்திய மொழிகளிலேயே தமிழில்தான் முதல் அச்சு நூல் வெளியானதுஅந்த நூலின் பெயர்  கார்டிலா என்பதாகும். இந்தியாவுக்கு அச்சு இயந்திரம் வருவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாகவே, 1554 இல் லிஸ்பன் நகரில்   இத்தமிழ்ப் புத்தகம் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதுஇந்த நூல் 38 பக்கங்கள் கொண்டது. போர்ச்சுகீசிய மொழி தெரிந்த  தமிழ் எழுதப்படிக்கத் தெரியாத  கிறித்தவ இறைத்தொண்டர்களுக்கு உதவும் வகையில் தமிழ் உச்சரிப்பில் வேதவாசகங்களைக் கூறுவதற்காக இந்நூல் உருவாக்கப்பட்டதுபோர்ச்சுகீசிய அரசரின் அழைப்பின்பேரில் முத்துக்குளித்துறை  எனப்படும்  தூத்துக்குடி  பகுதியிலிருந்து மூன்றுபேர் லிஸ்பர்ன் நகர் சென்று இந்நூல் உருவாக்கத்திற்கு உதவினர்.   இந்த நூலின் ஒரே ஒரு மூலப் பிரதி லிஸ்பனை அடுத்து உள்ள பெலெம் நகரில் உள்ள மானுடவியல் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது
                புனித சவேரியாரைத் தொடர்ந்து இயேசு சபைத் துறவியர் பலர் தமிழகத்திற்கு வந்தவண்ணமாக இருந்தனர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் போர்ச்சுக்கீசியரான  அன்டிரிக்கு அடிகளாராவார்.  இவர் தம்பிரான் வணக்கம் (1578), கிரீசித்தியானி வணக்கம் (1579) என்னும் நூல்களை கொல்லம், கொச்சி என்னும் இடங்களில் அச்சிட்டு வெளியிட்டார். இவ்விரண்டு நூல்களின் மூலமே அன்றைய மக்கள் கிறித்தவ சமயத்தின் உண்மைகளை சிறிது அறிந்து கொண்டனர்.   இந்நூற்களைத் தொடர்ந்து அடியவர் வரலாறு என்னும் நூலை 1586 ஆம் ஆண்டு வெளியிட்டார். இக்காலக்கட்டத்தில் அண்டிரீக்கு அடிகளாரின் வேண்டுகோளுக்கிணங்க திருநெல்வேலி  மாவட்டத்திலுள்ள புன்னைக்காயலைச் சேர்ந்த அந்தோனி என்பவர்   சந்தந்தோனியார் அம்மானை (புனித பதுவை அந்தோனியார் அம்மானை) என்னும் நூலை எழுதினார். ஆனால் இந்நூல் முதல் பதிப்பாக 1892 ஆம் ஆண்டு இலங்கையில் வெளியிடப்பட்டது. தமிழ் அச்சுக்கலையின் தந்தை அன்டிரீக்கு அடிகளார் என்பது குறிப்பிடத்தக்கதுஇவர் காலத்தில் புன்னைக்காயல், கொல்லம், கொச்சி ஆகிய இடங்களில் காணப்பட்ட அச்சகங்கள் பல்வேறு உள்நாட்டுப் போர்களின் காரணமாக அழிந்திருக்கலாம்.

                தத்துவப்போதகர் என்று அழைக்கப்பட்ட ராபர்ட்-டி-நொபிலி 1605 ஆம் ஆண்டு கோவா வந்தடைந்தார். இவர் தமிழகம் வந்து தமிழைக் கற்று தமிழ் உரைநடையின் தந்தை என அழைக்கும் வகையில் பல நூல்களை எழுதினார். இவர் எழுதிய சுமார் 48 நூல்களுள் ஞானோபதேசம், ஆத்ம நிருணயம், அஞ்ஞான நிவாரணம், திவ்விய மந்திரிகை, தத்துவக் கண்ணாடி, ஞான சஞ்சீவி, இயேசுவின் சரிதம், சிலுவையின் விசேச சல்லாபம், வியாகுல பிரசங்கம், தவக்காலப் பிரசங்கம், வெள்ளிக்கிழமை பிரசங்கம், புனர்ஜென்ம ஆட்சேபம் என்பன குறிப்பிடத்தக்கன.
                சீர்திருத்தச் சபையின் முதல் இறைத்தொண்டரான செர்மன் நாட்டைச் சேர்ந்த அருள்திரு. பர்த்தலோமேயு சீகன்பால்கு (1683-1719) தரங்கம்பாடிக்கு 1706 ஆம் ஆண்டு வந்தடைந்தார். தமது முழு முயற்சியுடன் விரைவாகத் தமிழ் மொழியைக் கற்றார். விவிலியத்தின் புதிய ஏற்பாட்டைத் தமிழில் மொழிபெயர்த்தார். 1708 ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் நாள் தமது நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் தாம் தமிழில் 14 நூற்களை எழுதியதாகக் குறிப்பிட்டுள்ளார்.   சீகன்பால்கு 1713 இல் Book of Hymns Set to Malabaric Music என்னும் பாடல் தொகுப்புநூலை வெளியிட்டார். இவை ஞானப்பாட்டுகள் என்றும் வழங்கப்படுகின்றனஇந்நூலில் 48 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.   செர்மன், ஆங்கில மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட   தமிழ் வழிபாட்டுப் பாடல்களை அவற்றிற்குரிய இசைமரபுப்படி மக்கள் ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பாடிப் பரவசமடைந்தனர்.    இப்பாடல்களே கிறித்தவக் கீர்த்தனைகளுக்கு அடிப்படையாக அமைந்தன. 1714 ஆம் ஆண்டு நான்கு நற்செய்தி நூல்களும் அப்போஸ்தல நடபடிகளும் நூலாக வெளிவந்தன. எஞ்சிய  நூல்கள் 1715 ஆம் ஆண்டு வெளியாயினபுதிய ஏற்பாடு முழுவதும் நூலாக வெளிவந்த பின்பு, பழைய ஏற்பாட்டை மொழிபெயர்க்க  ஆரம்பித்தார். பழைய ஏற்பாட்டில் ரூத்தின் புத்தகம் வரை அவரால் மொழிபெயர்க்க முடிந்தது. சீகன்பால்கு 36 ஆவது வயதில் காலமானது கிறித்தவ இலக்கியத்திற்குப் பேரிழப்பாகும்
                 
 சீகன்பால்குவைத் தொடர்ந்து இத்தாலி நாட்டைச் சார்ந்த வீரமாமுனிவர் 1711 ஆம் ஆண்டில் மதுரை வந்தடைந்தார். தமிழ் மொழியை விரைவாகவும் ஆழமாகவும் கற்ற வீரமாமுனிவர், தமிழ் எழுத்துகளில் குறில், நெடில் ஆகியனவற்றில் காணப்பட்ட குழப்பத்தைப் போக்கினார்.   இவரது தமிழ்ப்பணி சிற்றிலக்கியம், காப்பியம், உரைநடை, இலக்கணம், மொழிபெயர்ப்பு, அகராதி என விரிவான எல்லையுடையதாக அமைந்தது.   சீர்திருத்தப் பிரிவைச் சார்ந்த சீகன்பால்குவும் கத்தோலிக்கப் பிரிவைச் சார்ந்த வீரமாமுனிவரும் கிறித்தவ இலக்கிய உலகில் நல்ல நெல்மணிகளை விதைத்தவர்களாவர். சீகன்பால்கு மொழிபெயர்ப்புப் பணியுடன் அச்சகம், காகிதத் தொழிற்சாலை ஆகியனவற்றை நிறுவி, நூல்கள் மக்களின் கைகளில் கிடைக்க வழிவகுத்தார். வீரமாமுனிவர் காப்பியம், சிற்றிலக்கியம், இலக்கணம், அகராதி, உரைநடை, மொழிபெயர்ப்பு என்னும் வகைமைகளில் நூல்களைப் படைத்தார்இவ்விருவரின் பணிகள் தமிழக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினவிவிலியத்தைத் தமிழில் படித்தபின் இலக்கிய, இலக்கணப் புலமையுடையவர்கள் கிறித்தவ இலக்கியங்கள் படைக்க ஆரம்பித்தனர். அவர்களுள் முதன்மையானவர் வேதநாயக சாஸ்திரியாராவார்.

1774 ஆம் ஆண்டு பாளையங்கோட்டையில் பிறந்த வேதநாயக சாஸ்திரியாருக்குக்   கவிபாடும் திறன்   இயல்பாகவே அமைந்திருந்தது.             தமிழ் இலக்கியப் போக்கு, தமிழ்ப் பண்பாடு, தமிழ் இலக்கிய மரபு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நூல்களை வேதநாயக சாஸ்திரியார் படைத்தார்பல்வேறு நூல்களை எழுதிக் கிறித்தவ இலக்கிய வரலாற்றில் சிறப்பிடம் பெறுவதுடன் கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்கு ஆதாரமாகவும் அமைகிறார். வேதநாயக சாஸ்திரியார் சுமார் 77 சிறிய அளவிலான உரைநடை நூல்களை எழுதியுள்ளார். சாஸ்திரியார் தமது கீர்த்தனைகள் மூலமாகவே தமிழ்க் கிறித்தவர்களிடம் பெரிதும் அறியப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஏறத்தாழ ஐநூறு ஞானப்பதக் கீர்த்தனைகளை இயற்றியுள்ளார். சாஸ்திரியார் நாட்டுப்புறப் பாடல் நடையைத் தழுவி கீர்த்தனைகளை எழுதியுள்ளார் என்றாலும் இசை மேதைகளின் நுண்ணிய ராகதாளங்களின் அடிப்படையிலும் எழுதியுள்ளமை நோக்கத்தக்கது.   வேதநாயக சாஸ்திரியாரோடு மிகவும் நெருங்கிய நட்புறவு கொண்டவர் டாக்டர் ஜி.யு. போப் அவர்களாவர். வேதநாயக சாஸ்திரியாரோடு கிரேக்கப் புலவரான ஹோமரை ஜி.யு. போப் ஒப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.   வேதநாயக சாஸ்திரியார் தன்னிடம் வந்த பல அயல்நாட்டு இறைத்தொண்டர்களுக்கும் நம்நாட்டவர்க்கும் கீர்த்தனைகள் பாடும் முறைமையைக் கற்றுக் கொடுத்தார். அதனால் கீர்த்தனைகள் பாடும் வழக்கம் அக்காலத்தில் பல இடங்களுக்கும் வேகமாகப் பரவியது.

திருச்சபைகளில் பொதுவாகப் பயன்படுத்துவதற்குரிய கிறிஸ்தவக் கீர்த்தனை நூலுக்கு ஆதாரமாக இருந்தவர் அருள்திரு. . வெப். இவர் 1846 இல் அமெரிக்கன் மிசன் மூலம் மதுரையில் இறைப்பணியாற்ற வந்தார். மதுரையில் இறைப்பணியாற்றிக் கொண்டிருக்கும்போது தமிழ்க் கீர்த்தனைகளில் அதிக ஆர்வம் உடையவராக விளங்கினார். தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த வேதநாயக சாஸ்திரியாரின் கிறிஸ்தவ இலக்கியப் பணிகளையும், அவரது படைப்பாற்றலைப் பற்றியும் கேள்விப்பட்டார். ஆர்வமிகுதியினால் சாஸ்திரியாரை நேரில் சென்று பார்த்து அவருடைய கிறிஸ்தவப் பணியையும் குறிப்பாகக் கீர்த்தனைகள் இயற்றும் புலமையையும் அறிந்து கொண்டார்.

இந்நேரடி சந்திப்பின் மூலம் பெற்ற அனுபவங்களைச் சபை மக்களுக்கு நயம்பட எடுத்துக் கூறி சாஸ்திரியாரின் கீர்த்தனைகளைச் சபையில் அறிமுகப்படுத்தினார். கீர்த்தனைகளைப் பாட, பயிற்சி தேவைப்பட்டதால் வெப் 1852 ஆம் ஆண்டு தம்முடன் எட்டு இளைஞர்களை அழைத்துக் கொண்டு சாஸ்திரியாரிடம் சென்று, அவரிடம் கீர்த்தனைகளைப் பாடும் முறை பற்றியும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள இராக, தாள முறை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். பயிற்சி பெற்ற இவர்கள் சபை மக்களுக்குக் கீர்த்தனைகள் பாடும் முறைபற்றி விளக்கினர். மக்களும் கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தனர். மக்களின் கைகளில் ஞானப்பாடல் இருப்பது போன்று கீர்த்தனைகளும் இருக்கவேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் வெப் போதகர் 1853 ஆம் ஆண்டு ஞான கீதங்கள் என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டார். இதுவே கீர்த்தனைகளின் முதல் தொகுப்பு நூல். இந்நூலில் சாஸ்திரியாரின் பாடல்களை வெளியிட வெப் போதகர் சாஸ்திரியாரிடம் அனுமதி பெற்றிருந்தார்

இக்கீர்த்தனை நூலுக்கு மக்களிடம் அதிக வரவேற்பு இருந்தது. கீர்த்தனைகளை எவ்வாறு பாட வேண்டும் என்பதை சாஸ்திரியாரிடம் பயிற்சி பெற்று வந்த இளைஞர்கள் கிராமம் கிராமமாகச் சென்று கற்றுக் கொடுத்து கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் பாடுவதற்கு ஊக்கம் கொடுத்தனர். இதன் பின்னர் கிறித்தவத் தாய்மொழிக் கல்விக் கழகம்  இந்நூலை 1870க்கு முன்னர் இருமுறை மறுபதிப்புச் செய்தது.

வேதநாயக சாஸ்திரியார் வாழ்ந்த காலக்கட்டத்தில், அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராயர் கால்டுவெல்      இடையன்குடியில் 1838 ஆம் ஆண்டு  தமது   இறைப்பணியைத் தொடங்கினார். கால்டுவெல்லின் படைப்புகளில் மிகவும் சிறப்பாக இன்றும் பேசப்பட்டுவருவது திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலாகும். இந்நூலை 1856 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டார். கால்டுவெல் பதினைந்து ஆண்டுகள் ஆராய்ச்சி செய்ததன் விளைவாக இந்நூல் எழுதப்பட்டதுதென்னாட்டு மொழிகளையும் வடநாட்டு மொழிகளையும் ஆராய்ந்து இந்நூல் எழுதப்பட்டது. திராவிட மொழிகள் ஓரினத்தைச் சேர்ந்தவை என்பதை முதன்முதலாக உலகிற்கு உணர்த்தியவர்   கால்டுவெல். இவ்வாராய்ச்சிக்காக கிளாஸ்கோ பல்கலைக்கழகம் கால்டுவெல்லிற்கு டாக்டர் பட்டம் வழங்கியது.      கால்டுவெல் பதினெட்டு மொழிகளில் புலமையுடையவராகத் திகழ்ந்தார்.    திருநெல்வேலி வரலாறு என்னும் நூலிற்காக அன்றைய அரசு, கால்டுவெல் பேராயருக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடை அளித்தது. நற்கருணை தியானமாலை என்னும் நூலில் அழகிய தமிழ் நடையில் மேலைநாட்டு நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஷெபங்கள் எழுதப்பட்டுள்ளன. கால்டுவெல் தமிழ்மொழிக்காக ஆற்றிய பணி, தமிழக மக்களிடையே கிறித்தவ இறைத்தொண்டர்களின் மதிப்பினை உயரச் செய்தது.       

1888 ஆம் ஆண்டு அக்டோபர் பன்னிரண்டாம் நாள் இறைத்தொண்டராக இந்தியாவிற்கு அனுப்பப்பட்ட  அருள்திரு. ஸ்தொஷ்தமிழகத்தில் ஐந்து ஆண்டுகள் தங்கியிருந்து இறைப்பணி செய்தார்இவர் தரங்கம்பாடியிலிருந்த அச்சகத்தின் மேலாளராகவும்   பணிபுரிந்தார். இவர் தரங்கன்பாடி லுத்தரன் மிசன் அச்சகத்தின் மூலம் 1891 ஆம் ஆண்டு கிறிஸ்து மான்மியம் என்னும் கிறித்தவக் காப்பியத்தை வெளியிட்டார்.   மதுரை மாவட்டத்தில் அரசாங்கப் பணி செய்து வந்த ஸ்காட்  என்னும் ஆங்கிலேயர், 1891 ஆம் ஆண்டு சுவிசேட புராணம் என்னும் காப்பியத்தை மதுரை கிளக்ஹார்ன் அச்சாபீஸ் மூலம் வெளியிட்டார். இவர் தமது பெயரைத் தமிழ் நடைக்கேற்ப சுகாத்தியர் என மாற்றியிருப்பதன் மூலம் இவரது தமிழ்ப் பற்றினை உணர்ந்து கொள்ள முடிகிறது

இலங்கை நாட்டினரும் கிறித்தவ இலக்கியத்திற்குப் பெரும் பாங்காற்றியுள்ளனர். இலங்கைக் கிறித்தவர்கள்  காப்பியம், சிற்றிலக்கியம், கீர்த்தனை, மொழிபெயர்ப்பு, அகராதி, நாவல், சிறுகதை, கவிதை என அனைத்து வகைமைகளிலும் கிறித்தவ இலக்கியங்கள் படைத்துள்ளனர்இவர்களது படைப்புகள் பலநிலைகளிலும் சிறப்பு வாய்ந்தனவாக உள்ளன.    இலங்கையில் வெளிவந்த கிறித்தவ இலக்கியம் தேவஅருள் வேதபுராணம் எனப்படுகிறது. இதன் ஆசிரியர் 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த சாங்கோபாங்கர் கொன்சலாஸ் சுவாமிகள் (1676-1742) ஆவார்.   இவர் 1676 ஆம் ஆண்டு   இந்தியாவிலுள்ள கோவா மாநிலத்தில்  பிறந்தார்.    கோவாவில் இறையியல் பட்டம் பெற்ற பின்னர்     இலங்கைக்கு இறைப்பணியாற்றச் சென்றார். இவர் தமிழ் மொழியைக் கற்று   கிறித்தவ நூல்கள் பல படைத்து இலங்கையில் 27 ஆண்டு காலம் இறைப்பணியாற்றினார்இலங்கையில் 'வியத்தகு விண்மீன்எனப் புகழப் பெற்றவர்சாங்கோபாங்கர் கொன்சலால் சுவாமிகளின் படைப்புகள்   இலங்கையிலுள்ள கத்தோலிக்கக் கிறித்தவத்தை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளன. இவர் சுவிசேச விரித்துரைகள்சுகிர்த குறள், அற்புத வரலாறு, வியாகுலப் பிரசங்கம், தேவஅருள் வேதபுராணம், தர்ம உத்தியானம், ஞான உணர்த்துதல் என தமிழிலும் சிங்களத்திலுமாக சுமார் 35 நூல்களை எழுதியுள்ளார்.        கொன்சாலஸ் சுவாமிகள் எழுதிய பழைய, புதிய ஏற்பாட்டுச் சரித்திரம் என்னும் நூலே தேவஅருள் வேதபுராணம் என அழைக்கப்படுகிறது. இந்நூல் 1725 ஆம் ஆண்டு உரைநடை வடிவில் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.

இவரைத் தொடர்ந்து இலங்கை நாட்டினர் காப்பியம், சிற்றிலக்கியம், மொழிபெயர்ப்பு, கீர்த்தனை, புனைகதை எனப் பல வகைமைகளில் கிறித்தவ இலக்கியத்திற்குத் தமது பங்களிப்பைச் செய்துள்ளனர். இலங்கையில் யோசேப்புப் புராணம், திருவாக்குப் புராணம், ஞானானந்த புராணம், திருச்செல்வர் காவியம், நசரேய புராணம், இயேசு புராணம் என்னும் ஆறு காப்பியங்கள் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலைநாட்டு இறைத்தொண்டர்களின் படைப்புகளுக்கு சீகன்பால்குவும் வீரமாமுனிவரும் முன்னோடிகளாக இருந்ததைப் போன்று தமிழ்க் கிறித்தவ இலக்கியப் படைப்பாளர்களுக்கு வேதநாயக சாஸ்திரியார் முன்னோடியாக இருந்தார். வேதநாயக சாஸ்திரியாரின் பல்வகைப் படைப்புகள் மக்களுக்கு மிகவும் உந்துதலாக அமைந்திருந்தன. சாஸ்திரியார் கிறித்தவர்களுக்குத் தமது இலக்கியங்களின் மூலம் பக்தி உணர்வும் விழிப்புணர்வும் ஏற்படுத்தினார். ஆலயங்களில் மேலைநாட்டு இறைத்தொண்டர்களின் காலத்தில் மொழிபெயர்ப்புப் பாடல்களும் வேதநாயக சாஸ்திரியாரின் கீர்த்தனைகளும் பாடப்பட்டன. வேதநாயக சாஸ்திரியாரின் கீர்த்தனைகளைப் பாடிப் பரவசமடைந்தவர்களுள் விவிலியம், இலக்கணம், கவிதைப் புலமை உடையவர்கள் புதிதாகக் கீர்த்தனைகளை இயற்றினர். அவர்களுள் ஷான்பால்மர், ஞா. சாமுவேல், தேவவரம் முன்ஜியார், மரியான் உபதேசியார், ஜி.எஸ். வேதநாயகர், வே. மாசிலாமணி, சந்தியாகு, ஆபிரகாம் பண்டிதர் ஆகியோரைச் சில சான்றுகளாகச் சுட்டலாம். கீர்த்தனைக் கவிஞர்களின் கீர்த்தனைகள் மக்களின் பக்தி வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தின. இக்கீர்த்தனைகளும் கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் துணை நின்றன. இன்று புத்தெழுச்சிப் பாடல்களின் வரவினால் கீர்த்தனைகளைப் பாடிவருவது வெகுவாகக் குறைந்து வருகின்றது என்பது வருந்தத்தக்க செய்தியாகும்.

ஞானப்பாடல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெற்றி பெற்றதை ஆதாரமாகக்கொண்டு ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பல கிறித்தவ இலக்கியங்கள் தமிழில் எழுதப்பட்டன. அதைப்போல சில நூல்கள் தமிழில் தழுவல் முறையில் எழுதப்பட்டன. ஜான் மில்டனின்  Paradise Lost, Paradise Regained ஆகிய நூல்கள் அருள்திரு. வேதக்கண் அவர்களால் ஆதிநந்தாவனப் பிரளயம், ஆதிநந்தாவன மீட்சி என்னும் கீர்த்தனை நாடங்களாகக் கொண்டு வரப்பட்டன. மில்டனின் சிம்சோன் என்னும் நூல் மாமல்லன் சிம்சோன் என மொழிபெயர்க்கப்பட்டது. ஜான்பனியனின்  Pilgirim Progress  என்னும் நூல் மோட்சப் பிரயாணம் என்னும் நூலாகத் தமிழில் அருள்திரு. சாமுவேல் பவுல் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டது. இம்மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டு முதலில் சுவீகரனார் முத்திவழி அம்மானை என்னும் சிற்றிலக்கியத்தையும் பின்னர் எச்.. கிருஷ்ணபிள்ளை இரட்சணிய யாத்திரிகம் என்னும் காப்பியத்தையும் படைத்தனர். ஆங்கில இலக்கியத்தின் இருமகா கவிகளான பனியனும் மில்டனும் தமிழ்க் கிறித்தவ இலக்கியங்களின் வாயிலாக இன்றும் பேசப்பட்டு வருகின்றனர்.

மீதிஇருள் என்னும் முதல் கிறித்தவ நாவலை எழுதிய சி. அருமைநாயகம் அன்றைய கிறித்தவ சமூகத்தை அழகாகப் படம் பிடித்துக் காட்டுகிறார். இதைத் தொடர்ந்து எழுதிய கிறித்தவ நாவலாசிரியர்களும் கிறித்தவ சிறுகதை ஆசிரியர்களும் கிறித்தவ சமூகத்தில் காணப்படுகின்ற சிக்கல்களையும் இழிவுகளையும் வெட்ட வெளிச்சமாகப் படம் பிடித்துக் காட்டி வருகின்றனர். இத்தகைய நடப்பியல் தன்மை ஏராளமான புனைகதை இலக்கியங்களைப் படைப்பதற்கு அடிப்படையாக இருந்தது என்பது மறுக்கமுடியாத உண்மை.

கிறித்தவ இலக்கிய வகைமைகளில் சிற்றிலக்கியம் அதிக அளவில் படைக்கப்பட்டுள்ளது. கிறித்தவ சிற்றிலக்கியத்தை வீரமாமுனிவர் அறிமுகப்படுத்தியவராக இருப்பினும், தமிழராகிய அந்தோனி என்பவரால் எழுதப்பட்ட சந்தந்தோனியார் அம்மானை முதல் கிறித்தவச்  சிற்றிலக்கியமாக விளங்குகிறது. வீரமாமுனிவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக் கிறித்தவர்கள் கிறித்தவ உண்மைகளை எளிமையாக விளக்க சிற்றிலக்கியத்தைக் கருவியாக எடுத்துக் கொண்டனர். பூரணி என்னும் புதுவகைச் சிற்றிலக்கியத்தைக் கிறித்தவப் படைப்பாளர்கள் அறிமுகப்படுத்தினர். மேலும் சிற்றிலக்கியங்களிலே பெரிய அளவிலான சிற்றிலக்கியமாக முத்திவழி அம்மானை திகழ்கிறது. கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் கிறித்தவக் கொள்கைகளை மட்டுமன்றி சமூகச் சீர்திருத்தக் கருத்துகளையும் விவரிக்கின்றன. வேதநாயக சாஸ்திரியாரின் சாஸ்திரக்கும்மி மூடப்பழக்க வழக்கங்களைக் கண்டிக்கிறது. அருள்திரு. மாசிலாமணியின் மதுகொண்டான்கதை மது உண்பதால் ஏற்படும் கேடுகளை விளக்கிக் காட்டுகிறது. குமரி மாவட்டத்தில்  ஏராளமான கிறித்தவச் சிற்றிலக்கியங்களைப் படைத்த பெருமை திட்டூர் தேசிகரையேச் சாரும். கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையை அளவிட்டுக் கூறவியலாது. இவற்றில் பல அழிந்துவிட்டன என்பது வருத்தத்திற்குரியது.

விவிலியத்திலுள்ள மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்களை ஆதாரமாகக் கொண்டு பல காப்பியங்களும் குறுங்காப்பியங்களும் படைக்கப்பட்டுள்ளன. இவை கிறிஸ்துவின் பிறப்பு முதல் அவர் பரலோகம் சென்றது வரையிலான நிகழ்வுகளைச் செய்யுள் வடிவில் தருகின்றன. இப்படைப்புகள் கிறித்தவ இலக்கிய வளர்ச்சிக்குச் சான்றுகளாக அமைகின்றன. விவிலியச் செய்திகளை மட்டுமல்லாது விவிலியத்திலுள்ள மாந்தர்களை, இறைத்தொண்டர்களை அடிப்படையாகக் கொண்டும் காப்பியங்கள் படைக்கப்பட்டுள்ளன. தேம்பாவணியைத் தொடர்ந்து இன்றும் காப்பியப் படைப்புகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.


1600 ஆம் ஆண்டிற்கு முன்னர் தமிழராகிய அந்தோனி என்பவரால் எழுதப்பட்ட சந்தந்தோனியார் அம்மானை (புனித பதுவை அந்தோனியார் அம்மானை) முதல், இன்றுவரை  வெளிவந்து கொண்டிருக்கும் வகையில் தனித்துவம் பெற்றனவாகக் கிறித்தவ இலக்கியங்கள் திகழ்கின்றன.   இக்கிறித்தவ இலக்கியங்களின் வரலாறு, வளமை, செழுமை, தனித்துவம் ஆகியவை கிறித்தவ இலக்கிய உலகில் நிலையாக ஒளிவீசிக் கொண்டிருக்கின்றனஇவ்வளர்ச்சிக்கெல்லாம் மேலைநாட்டு இறைத்தொண்டர்களின் உழைப்பும் தியாகமும் என்பது மறுக்க முடியாத உண்மை. இக்கிறித்தவ இலக்கியங்கள் பற்றிய விழிப்புணர்வும் அவற்றைப் படிக்கும் ஆர்வமும் பாதுகாக்கும் உணர்வும் அவற்றை ஆய்வு செய்யும் தன்மையும் இன்று வளர்ந்து வருவது கண்கூடு.

1 கருத்து: