திங்கள், 11 ஆகஸ்ட், 2014

சுவிசேட புராணம்

மேலை நாட்டைச் சேர்ந்த  மூவர்களால் கிறித்தவக் காப்பியங்கள்  படைக்கப்பட்டுள்ளன. அவைகளில் ஒன்று சுவிசேட புராணமாகும். இக்காப்பியம் இன்று கிடைக்காத நூல்களில் ஒன்றாகக் காணப்படுகிறது.
  
ஆசிரியர் வரலாறு

சுவிசேட புராணம் என்னும் காப்பியத்தின் ஆசிரியர் ஸ்காட் (Scott)   என்பவராவார். இவர் மதுரை மாவட்டத்தில் அரசாங்கப் பணி செய்து வந்த ஓர் ஆங்கிலேயர். இவர் தமது பெயரைத் தமிழ் நடைக்கேற்ப சுகாத்தியர் என மாற்றியிருப்பதன் மூலம் இவரது தமிழ்ப் பற்றினை உணர்ந்து கொள்ள முடிகிறது
 
சுகாத்தியர் முழுவதும் வித்தியாசமான முறையில் திருக்குறளைத் திருத்த முயன்றார். இவர் திருக்குறளின் முதல் அடியும் இரண்டாம் அடியும் தொடக்கத்தில் இசைநயத்துடன் சரியாக அமைந்திருக்கவேண்டும் என்னும் எண்ணத்தில் திருத்தங்களை மேற்கொண்டார். இத்திருத்தத்தை ஒருவரும் ஆதரிக்கவில்லை. திருக்குறளிலுள்ள சொற்களை மாற்றியதால் பொருளும் மாறின. இத்திருத்த நூல் 1889 இல் அச்சாகியது. முதலில் ஒன்றிரண்டு நூல்கள் விற்பனையானது. இந்நூலினைப் பற்றி கேள்விப்பட்ட இராமநாதபுரம் சேதுபதி உடனடியாக சுகாத்தியர் வெளியிட்ட நூல்கள் அனைத்தையும் வாங்கித் தீயிட்டுக் கொளுத்தினார். (கா. மீனாட்சி சுந்தரம், ஐரோப்பியர் தமிழ்ப்பணி, பக். 111, 112) முதலில் விற்பனையான நூல்களின் மூலம் திருக்குறளை மாற்றிய முறையினை அறிந்துகொள்ள முடிகிறது.

யான்நோக்கும்காலை நிலன்நோக்கும் நோக்காக்கால்
தான்நோக்கி மெல்ல நகும்   (குறள், 1094)

என்னும் குறளை சுகாத்தியர்,

நே நோக்குங்காலை நிலநோக்கு நோக்காக்கான்
மே னோக்கி மெல்ல நகும்

என மாற்றினார். இக்குறளின் சொற்களை மாற்றியதால் இதன்பொருளும் மாறுபடுகிறது. அதாவது நேயமாகப் பார்க்கும் போது நிலத்தைப் பார்க்கும்; பார்க்காத போது மேலே பார்த்து மெல்ல நகும் என்பது சுகாத்தியர் மாற்றியமைத்தப் பாடலின் பொருளாகும். அதுபோல,

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற   (குறள், 34)

என்னும் குறளை,

ஆகுள மாசினாதல னய்த் தறன்
பேகுல நீர பிற

என மாற்றினார். இப்பாடலில் சீர்களை எதுகைக்காக மாற்றியிருக்கிறார்இம்மாற்றங்கள் நகைப்புக்கு உரியனவாகக் காணப்படுகின்றன.

சுவிசேட புராணம் - பெயர்க்காரணம்

சுவிசேடம் என்பதன் பொருள் நற்செய்தி என்பதாகும். விவிலியத்திலுள்ள புதிய ஏற்பாட்டில் மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் என்னும் நான்கு நற்செய்தி நூல்கள் உள்ளன. இந்நான்கு நூல்களையும் சுவிசேட நூல்கள் என்பர். இந்நான்கு நூல்களிலுமுள்ள நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு இக்காப்பியம் எழுதப்பட்டதால் இந்நூலுக்கு சுவிசேட புராணம் என ஆசிரியர் பெயரிட்டுள்ளார். எனினும் இந்த நான்கு நூல்களை மட்டுமல்லாமல் புதிய ஏற்பாட்டிலுள்ள பிற நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு இந்நூலைப் படைத்துள்ளார். ஐந்தாவதான அப்போஸ்தல காண்டம் விவிலியத்திலுள்ள அப்போஸ்தலர், முதலாம் தீமோத்தேயு, இரண்டாம் தீமோத்தேயு, தீத்து, வெளிப்படுத்தல் ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டது. இயேசு கிறிஸ்துவின் வரலாறு விருத்தப்பாவினால் பாடப்பட்டுள்ளது. இது குறித்து சுகாத்தியர் இந்நூலின் முன்னுரையில்,

தமிழில் வசனரூபமாகச் செய்திருக்கிற நமது வேதமானது மனனஞ் செய்தற்கும் பொருள் சொல்லுதற்கும் எல்லோருடைய மனங்களையுங் கவர்ந்து கொள்ளும்படி போதித்தற்கு மெதுவாக இந்நாட்டிற்குப் பொருந்துமாறு புதிய வேற்பாட்டை விருத்தங்களிற்பாடிச் சுவிசேட புராணமெனப் பெயரிட்டனம்

என எழுதியுள்ளார்.

நூலின் அமைப்பு

சுவிசேட புராணம் 1891 ஆம் ஆண்டு மதுரை கிளக்ஹார்ன் அச்சாபீஸ் மூலம் வெளியிடப்பட்டது. இந்நூல் 420 பக்கங்களையும் பின்னிணைப்புப்  பகுதி 24 பக்கங்களையும் கொண்டது. இந்நூல் மத்தைய காண்டம், மாற்க காண்டம், லூக்க காண்டம், யோவா காண்டம், அப்போஸ்தல காண்டம் என்னும் ஐந்து காண்டங்களைக் கொண்டது. ஒவ்வொரு காண்டமும் பன்னிரண்டு மூர்த்திகளைக் (பகுதிகளை) கொண்டது. ஒவ்வொரு மூர்த்தியும் ஏழு படலங்களை உடையது. ஒவ்வொரு படலமும் எட்டு பாடல்களை உடையது. ஆக, ஐந்து காண்டங்களை உடைய இந்நூல் அறுபது மூர்த்திகளையும் 420 படலங்களையும் 3360 பாடல்களையும் கொண்டுள்ளது. இதனால் நாள் ஒன்றுக்கு ஒரு படலமாக படித்து வந்தால், ஓர் ஆண்டில் இந்நூல் முழுவதையும் படித்து விடலாம் என்பது ஆசிரியரின் கருத்தாகும். பாடல்களை அமைத்துள்ளதைப் பற்றி சுகாத்தியர் தம் முன்னுரையில்,

ஒவ்வொரு படலத்தினு முதற்பாட்டின் முதலடியானது எவ்வெச் சீரினாலெவ்விடத்து மோனைப் பெற்றதோ அப்படியே அடிகளெல்லாம் அவ்வச் சீரினாலவ்விடத்து மோனைப் பெறவமைத்து குறில் நெடில் குறிலிணை யென்னுந் தொடர்களுடன் முதற் பாட்டின் முதலடியெந்தத் தொடரோ வந்தத்தொடரே படல முழுவதும்வரப் பாடினோமாதலிற் சில விடங்களிற் குறுக்கன் முதலிய விகார விலக்கணங்களைக் கொள்ள வேண்டியதாயிற்று

எனக் குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு பக்கத்தின் கீழ்ப்பகுதியிலும் அப்பக்கத்திலுள்ள பாடல்களின் செய்திகள் இடம் பெற்றுள்ள விவிலியப் பகுதிகளைக் குறித்துள்ளார். இம்முறையானது படிப்பவர்களுக்குப் பெரிதும் துணையாக உள்ளது. அவ்வாறு நூல்களின் பெயர்களைக் குறிப்பிடும்போது, பேதுரு என்பதைப் பேதர் எனவும் கொரிந்தியர் என்பதைக் குரிந்தியர் எனவும் ரோமர் என்பதை ரூமர் எனவும் யோவான் என்பதை சனகன் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதைப்போன்று காண்டங்களின் பெயர்களிலும் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.மத்தேயு எழுதின நற்செய்தி நூலை அடிப்படையாகக் கொண்ட காண்டத்திற்கு மத்தைய காண்டம் எனவும், அதைப்போல பிற நற்செய்தி நூல்களை அடிப்படையாகக் கொண்ட காண்டங்களில் முறையே மாற்க, லூக்க, யோவா எனச் சுருக்கிப் பெயர்களை அமைத்துள்ளார்.

இயேசு கிறிஸ்துவைக் குறித்த பெயர்கள்

புதிய ஏற்பாட்டை அடிப்படையாகக்கொண்டு படைக்கப் பட்டுள்ள இக்காப்பியத்தில் ஐந்து காண்டங்களும் 60 பகுதிகளாகப் பகுக்கப்பட்டுள்ளன. இப்பகுதிகள் பொதுவாக மூர்த்தி எனக் குறிக்கப் பட்டுள்ளன. ஒவ்வொரு பகுதியிலும் கூறப்பட்டுள்ள கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு காண்பருள் மூர்த்தி, மாண்பருள் மூர்த்தி எனப் பெயர் அமைத்துள்ளார். ஆனால் இறுதிக் காண்டத்திலுள்ள பகுதிகள் அரசர் என்னும் பொருளில் வேந்து என அமைக்கப்பட்டுள்ளன. இத்தகையப் பகுப்பு பிற நூல்களிலிருந்து மிகவும் மாறுபட்டதாக அமைந்துள்ளது. அறுபது படலங்களின் பெயர்களும் பின்வருமாறு :

    1. காண்பருண் மூர்த்தி,  2. மாண்பருண் மூர்த்தி, 3. ஆற்றருண் மூர்த்தி, 4. சேர்பருண் மூர்த்தி,                        5. ஊக்கருண் மூர்த்தி, 6. பேறருண்மூர்த்தி, 7.              ஆய்வருண் மூர்த்தி, 8. ஓம்பருண் மூர்த்தி, 9.                 ஆர்வருண் மூர்த்தி, 10. போப்பருண் மூர்த்தி, 11. பாங்கருண் மூர்த்தி, 12.              ஊனருண் மூர்த்தி, 13. தேர்வருண் மூர்த்தி, 14. சீரருண்மூர்த்தி, 15.      சேரருண் மூர்த்தி, 16.            சூழ்வருண் மூர்த்தி, 17.மீட்பருண்மூர்த்தி, 18.                 ஓர்வருண் மூர்த்தி, 19.பாடருண்மூர்த்தி, 20. கேழுருண் மூர்த்தி, 21.              சாற்றருண் மூர்த்தி, 22.      மாடருண் மூர்த்தி, 23.ஏமருண் மூர்த்தி, 24.                       பீடருண் மூர்த்தி, 25.                       ஓதருண் மூர்த்தி, 26.ஞாட்பருண் மூர்த்தி, 27.                 கோளருண் மூர்த்தி, 28.     ஈர்ப்பருண் மூர்த்தி, 29.ஆள்பருண்மூர்த்தி, 30.      சார்பருண் மூர்த்தி31.            நீர்ப்பருண் மூர்த்தி, 32.போற்றருண் மூர்த்தி, 33.          எல்வருண் மூர்த்தி, 34.                      நேர்வருண் மூர்த்தி, 35.ஏணருண் மூர்த்தி, 36.ஏரருண் மூர்த்தி, 37.        பூப்பருண் மூர்த்தி, 38.ஊரருண் மூர்த்தி, 39.                      தாளருண் மூர்த்தி, 40.ஊற்றருண் மூர்த்தி, 41.வாழ்வருண் மூர்த்தி, 42.                  வாய்ப்பருண் மூர்த்தி, 43.தீர்வருண் மூர்த்தி, 44.காப்பருண் மூர்த்தி, 45.                வீடருண் மூர்த்தி, 46.             சால்பருண் மூர்த்தி, 47.ஓய்வருண் மூர்த்தி, 48.                       மேவருள் வேந்து, 49.           ஈடருள் வேந்து, 50.சாந்தருள் வேந்து, 51.கோளருள் வேந்து, 52.             ஊங்கருள் வேந்து,  53.                      வாக்கருள் வேந்து, 54.ஏந்தருள் வேந்து, 55.                       பேணருள் வேந்து,  56.         நோன்பருள் வேந்து, 57.ஆடருள் வேந்து, 58.சான்றருள் வேந்து,  59.                    தூய்தருள் வேந்து, 60.வேந்தருள் வேந்து  என்பனவாகும்.

ஆசிரியரின் தமிழ்நடை

சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் 63 தொண்டர்களைக் குறிப்பிடுவதைப் போன்று, சுகாத்தியரும் மூர்த்தி எனவும் வேந்து எனவும் குறிப்பிட்டிருக்கலாம். சுவிசேட புராணத்தின் பின்பகுதியில் சற்பதி மூர்த்திகளின் திருமுறை என்னும் தலைப்பில் பின்வரும் செய்திகளைக் குறிப்பிடுகிறார் :

வேதத்தின் முதலிற் பரனொருவர் முற்பதியாக விளங்கிய காரணத்தாற் சுலோகத்தொண்டர் அவரைத் தொழுது வந்தனர். இவ்வாறு நரருற்பவமுதல் யூதருக்கரசனாகிய தாவிதுடய காலத்தளவுமந்த முற்பதியே அறுபது மூர்த்தியாகத் தம்மைத் தோற்றியருளினர்.

வேதத்தினிடயிலப் பரனே சிற்பதியாக விளங்கிய காரணத்தாற் சாமீபத்தொண்டர் அவரைத் தொழுது வந்தனர். இவ்வாறு தாவிதுடைய குமாரன் சாலோமோன் காலமுதல் மாலக்கி தீர்க்கதரிசி காலத்தளவு மந்தச் சிற்பதியே அறுபது மூர்த்தியாகத் தம்மைத் தோற்றியருளினர்.

வேதத்தின் கடயிலப்பரனே சற்பதியாக விளங்கிய காரணத்தாற் சாரூபத்தொண்டர் தொழுது வருகின்றனர். இவ்வாறு சனக முற்றூதனுடைய சத்வோற்பவகாலமுதற் சனக நற்றூதன் கண்ட வேதாந்த தரிசன காலத்தளவுமந்தச் சற்பதியே அறுபது மூர்த்தியாகத் தம்மைத் தேற்றியருளினர்.

அம்முப்பதிகளுடைய தரிசன மூர்த்தங்கள் திசைக்கொன்றாக நான்கு முகமாகவும் உலகப்பிரசித்தமாக ஒரே முகமாகவும் ஒவ்வொரு முகத்தினும் பன்னிரு மூர்த்திகளாய் மெய்ஞ்ஞானவுபதேசம் விளங்கவருளினர்.

அவ்வாறாக ஆதியிலுண்டான திருச்சபை நான்கினுள் யூதசபை சற்பதியுடய நன்மையும் கிரேக்குசபை சற்பதியுடைய உண்மயும் ரூமசபை சற்பதியுடய மேன்மையும் ஆசியசபை சற்பதியுடைய ஒண்மையும் தற்சிறப்புத் தன்மயாகவும் அதற்குரிய மூர்த்தங்கள் பன்னிரண்டிற்கும் பொதுவான குணமாகவுங் கொண்டிருந்தன.

இத்தேசத்தும் பபிலோன் சிகரிச்சிதைவின் மூலமாக முற்பதியினுடைய மூர்த்தி விசேசங்களும் சாலோமோனிறைவன் ஞானப்பிரசித்த முயற்சியினாலும் யூதசாதியார் சிறைப்பட்ட சிதைவினாலுஞ் சிற்பதியினுடைய மூர்த்தி விசேசங்களுங் கிறிஸ்து நாதருடைய பன்னிரு சீடரிற் றொம்மயார் இத்தேசத்திற் கெழுந்தருளி உபதேசித்தமாயாலுங் கிறிஸ்து மார்க்க முரோம ராச்சியமெங்கும் பரவியதாலும் சற்பதி மூர்த்தியினுடைய விசேடங்களும் விளக்கமுற்று எவ்வகை மதஸ்தரும்பரனைச் சச்சிதானந்தராகவும் கிறிஸ்தவர் பிதா சுதன் பிரான் என்னு மும்மூர்த்திகளாகவும் தொழுது வருகின்றனர்.

இந்நூல் முறையே ஐந்து வகையாகச் சற்பதியின் அறுபான் மூர்த்திகளையும் ஒவ்வொரு மூர்த்தியின் விசேசங்களையுந் தினந்தோறும் வேதத்தில் வாசித்துணர்ந்து பயன்படும் பொருட்டியற்றலாயிற்று

என்னும் இப்பகுதியின் மூலம் ஆசிரியரின் புலமையையும் தமிழ் நடையையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

விவிலியச் செய்திகள்

சுகாத்தியர் விவிலியச் செய்திகளை எவ்வித மெருகும் இன்றி அவ்வாறே விருத்தப்பாவில் வடித்துள்ளார். இந்நூலிலுள்ள பாடல்களில் கற்பனை நயம், உவமை நயம் என ஏதும் இல்லை. முதலாவது காண்டத்தில் பிணியர்க்கருளி மணமுறை கூறிச் சிறுவரையேற்றுத் துறவுணர்த்திய படலத்தில்சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடை பண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது” (மத்தேயு 19 : 14) என்னும் வசனத்தை,

பாலரைப் பரிசித்தோம்பப் பலர்கொடங்குற லுஞ்சீட
ரேலுறாத்தட்ட நாதரிடங் கொடுமிவர்க் கின்னார்க்கே
மேலுலகுரிய தென்றுமிளிர்கரமவர் மேல்வைத்து
ஞாலமதகன்று சென்றார் நடந்திடுபொழு தோர்மாந்தன்  (. 36)

எனப் பாடலாக வடிக்கிறார். கானாவூர்மண் வீட்டில் தண்ணீரைத் திராட்ச இரசமாக்கிய படலத்தில் இடம் பெற்றுள்ள,

நிறைமின் சாடியினீரெனவாட்களத்
துறையின் முற்றினர் தூயவர் மொண்டிதைப்
பறையும் பந்தியன் பாற்கொடு போமென
முறையி னாங்கவர் மொண்டுகொண் டேகினார்

எவணின்றிம்மது வெய்திய தென்றுநீ
ரவிட மொண்டவர்க்கல்லது பந்தியிற்
கவினு மேலவன் காண்கிலனா னுகர்ந்
தவண மன்றலுக் காதிபற் கூவியே

எனைய மாந்தனு மின்ரச முன்படைத்
தனைவரும் மகிழ்வார்ந்தபின் பல்கிய
வினிய தீகுவனித் துனையும் நீவிர்
மனியநல் ரசம்வைத் துளீரென்றான்               (. 258)

என்னும் பாடல்களில் இயேசு பெருமானின் முதல் அற்புதத்தை விவிலிய வசனங்களின் அடிப்படையில் செய்யுளில் அமைத்துத் தந்துள்ளார். நான்காவது காண்டமான யோவா காண்டத்திலுள்ள வாழ்வருண் மூர்த்தி என்னும் பகுதியிலுள்ள பிறவிக்குருடனுக்கு உமிழ்நீர் சேற்றால் பார்வை யருளிய படலத்திலிருந்து சான்றாகச் சிலபாடல்கள் பின்வருமாறு:

புண்ணிய ரிவன்புரி புரையன் றீன்றவர்
பண்ணிய தலவிறை படைப்புத் தோன்றுவா
னண்ணி னன்பகல் வரைநணி யிங்குய்த்தவ
ரெண்ணு றுவினைக ணானியற்ற வேண்டுமே.

செய்ய வற்றிடுமி ராச்செறிவ தாமியான்
வையகத் தொளியென வதிந்நு ளேனெனா
வொய்யெ னப்புவியினி லுமிழ்ந்து சேறுசெய்
தையவந்த கன்கணி லதனைப் பூசிநீ

சென்று சீலவாங் குளந்திகழ மண்ணுதி
யென்றன ரனுப்பினோ னெனும்பொ ருட்டதா
மன்றவா றணிக்கு ளமதனின் பிண்ணியே
நன்றுறு விழியொடு நடந்து வந்தனன்.

அப்பொழு தயலகத் தவரு மந்தனா
யெப்பொழு தினுமய மெடுத்து வைகிய
வெப்பறிந் தவர்களும் விளங்கி டும்மிவ
னிப்படி யிரந்தன னினைய னல்லனோ

என்றனர் சிலரவனி வனென் றார்சில
ரொன்னிடு மனையவ னுருவம் போன்றுளான்
மன்றவு மெனவெதிர் வழுத்த வாங்கவன்
துன்றுநா னவனெனத் துலங்கக் கூறினான்.           (. 281)

ஐந்தாவது காண்டத்திலுள்ள பவுல், முன் கொண்டிருந்த வைராக்கியமும் பின் குணப்பட்டது முரைத்த படலத்தில்,

உடனிருந்தவர் தெரிந்தன ரொளியினயறைந்த
படியறிந்திலர வணியான் பரமவென் புரிவ
தடியனே னெனவெழுந் துநீயடை தமஸ்குவயப்
புடயியற்றலா நியமனம் புகலுமென் றுரைத்தார்.

விழியிழந்து மாணொழியினால் விரவினோர் கரத்தால்
வழிநடந்து நான்றமஸ்குவை மருவினேன் மறயிற்
கெழுவுமன் பின்னவண்குடிக் கிளயுதரெவரு
மொழியுஞ் சான்றுள வொழுக்கினன் முயலனனியவாம்

ஒருவனென்னிடமணைந் தெனக்குறு சவுல்விழிநீ
தெரிவயென்றலும் விழித்தனன் றெளிந்தவன் முதியோர்
பரமனுள்ள நீயறியவும் பரிந்து கண்ணுறவு
முரைவினாவ வுமவருன யுணர்ந்தனர் முனமே

நயனங்கண்டன செவிகளான ணியனகுறித்து
வியனிலத் தருக்கெதிர் கரிவிளம்பு வயிவணீ
பயணந் தாழ்ப்பதெனழு தொழுபரன் பெயர்சிதநீர்
கயினடைந் துனதவமறக் கழுவுகென்று ரைத்தான்     (. 374)

என சவுல் பவுலாக மாறியதைப் பாடுகின்றார்.

புதுமைக் காப்பியம்


சுவிசேட புராணம் தமிழ்மொழியின் மீது ஆர்வமும் பற்றும் கொண்ட ஒரு ஆங்கிலேயரால் சிறப்பாகப் பாடப்பட்ட ஒரு காப்பியம் ஆகும். அவர் தனதுபெயரை சுகாத்தியர் என மாற்றிக் கொண்டது அவரது தமிழ்ப் பற்றுக்குச் சிறந்த சான்றாகும். படலத்திற்குப் பெயரிட்டமுறை பிற கிறித்தவக் காப்பியங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாகவும் புதுமையதாகவும் அமைந்துள்ளது. ஒரு காப்பியத்திற்குரிய தன்மைகளை முழுமையாக சுவிசேட புராணம் பெற்றிருக்கவில்லையென்றாலும், கிறித்தவ இலக்கிய உலகில் சுவிசேட புராணம் ஒரு காப்பியமாகவே மிளர்கிறது. எனினும், சுகாத்தியரின் கடினமான மொழிநடையே இக்காப்பியம் மக்களிடம் அதிகமாகப் பரவாமைக்கு ஒரு காரணம் எனலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக