திங்கள், 11 ஆகஸ்ட், 2014

வரலாற்று நோக்கில் கிறித்தவக் கீர்த்தனைகள்

  சீர்திருத்தத் திருச்சபைச்  (Protestant Church)    சிற்பி மார்டின் லூதர் (1483-1546), திருச்சபையில் கொண்டுவந்த சீர்திருத்தங்களுள் முக்கியமான ஒன்று வழிபாட்டுமுறை மாற்றங்கள் ஆகும்.   அவர் உருவாக்கிய ஆராதனை முறைகளில் பாடுவதற்காக மார்டின் லூதரும், ஜோஹான் வால்த்தரும் புதிய பாடல்களை எழுதி இசையமைத்தனர். இப்பாடல்கள் 1524 ஆம் ஆண்டில் முதன் முதலாகத் தொகுக்கப்பட்டன. இத்தொகுப்பே ஜெர்மன் மொழியில் வெளியான முதல் ஞானப்பாட்டு அல்லது பாமாலை    (Hymn)  நூலாகும். இந்நூலின் பெயர் “Gestliches Gesangbuchlein’’ என்பதாகும். இந்நூலில் ஐந்து இலத்தீன் பாடல்களும் 32 ஜெர்மானியப் பாடல்களும் இடம்பெற்றிருந்தன.

 1706 ஆம் ஆண்டு தரங்கம்பாடிக்கு வந்த இறைப்பணியாளர் அருள்திரு. பர்த்தலோமேயு சீகன்பால்கு அவர்கள், மக்கள் தாய்மொழியாகிய தமிழில் இறைவழிபாடு செய்ய வேண்டும் என்னும் நோக்கில் விவிலியத்தையும் செர்மன் மற்றும் ஆங்கில மொழிப்பாடல்களையும் மொழிமாற்றம் செய்தார். சீகன்பால்கு 1713 இல் “Book of Hymns Set to Malabaric Music’’     என்னும் பாடல் தொகுப்புநூலை வெளியிட்டார். இவை ஞானப்பாட்டுகள் என்றும் வழங்கப்படுகின்றனஇந்நூலில் 48 பாடல்கள் இடம் பெற்றிருந்தன.       இந்த மேலைநாட்டுத் தமிழ் வழிபாட்டுப் பாடல்களை அவற்றிற்குரிய இசைமரபுப்படி     மக்கள்   ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் பாடிப் பரவசமடைந்தனர்.   சீகன்பால்குவைத் தொடர்ந்து சூல்சே, வால்தர், பிரேசின் மற்றும் பெப்ரீசியஸ் ஆகியோர் தமிழில் வழிபாட்டுப் பாடல்களை மொழிபெயர்த்தனர்இவர்களுள் பெப்ரீசியசின் பணி குறிப்பிடத்தக்கது.  
       
                வேதநாயக சாஸ்திரியார் கிறிஸ்தவக் கீர்த்தனைகள் எழுதியவருள் முன்னவராகவும் முதல்வராகவும் காணப்படுகின்றார். கிறிஸ்தவக் கீர்த்தனைகள் சாஸ்திரியாரின் காலத்திலிருந்து தொடங்குகின்றன. நம்நாட்டுக் கவிஞர்களால், நம்நாட்டுச் சூழலுக்கேற்ப இராக, தாளங்களைக் கொண்டு இக்கீர்த்தனைகள் படைக்கப்பட்டதால் மக்களிடம் இவை அதிக செல்வாக்குப் பெற்றன. இக்கவிஞர்கள் இறையியல் தெளிவு பெற்றவர்களாகவும், தமிழ்மொழியையும் பண்பாட்டையும் குறித்து அறிந்தவர்களாகவும் இலக்கணப் புலமை உடையவர்களாகவும் விளங்கினர் என்பதை இவர்களது கீர்த்தனைகள் வாயிலாக அறியமுடிகிறது. இவர்கள் தங்கள் காலத்திலிருந்த இலக்கியம், இசை, பண் ஆகியவற்றை அறிந்தவர்கள்; சமயத்தால் கிறிஸ்தவர்களாக இருப்பினும் இனத்தால் - மரபால் - உணர்வால் தமிழர்கள்.
                திருச்சபைகளில் பொதுவாகப் பயன்படுத்துவதற்குரிய கிறிஸ்தவக் கீர்த்தனை நூலுக்கு அடிகோலியவர் அருள்திரு. . வெப் (Edward Webb).  இவர் 1846 இல் அமெரிக்கன் மிஷன் மூலம் மதுரையில் இறைப்பணியாற்ற வந்தார். இவர் மதுரையில் இறைப்பணியாற்றிக் கொண்டிருக்கும்போது தமிழ்க் கீர்த்தனைகளில் அதிக ஆர்வம் உடையவராக விளங்கினார். தஞ்சாவூரில் வாழ்ந்து வந்த வேதநாயக சாஸ்திரியாரின் கிறிஸ்தவஇலக்கியப் பணிகளையும், அவரது படைப்பாற்றலைப் பற்றியும் கேள்விப்பட்டார். ஆர்வமிகுதியினால் சாஸ்திரியாரை நேரில் சென்று பார்த்து அவருடைய கிறிஸ்தவப் பணியையும் குறிப்பாக கீர்த்தனைகள் இயற்றும் புலமையையும் அறிந்து கொண்டார்.

                இந்நேரடி சந்திப்பின் மூலம் பெற்ற அனுபவங்களைச் சபை மக்களுக்கு நயம்பட எடுத்துக் கூறி சாஸ்திரியாரின் கீர்த்தனைகளைச் சபையில் அறிமுகப்படுத்தினார். கீர்த்தனைகளைப் பாட, பயிற்சி தேவைப்பட்டதால் அருள்திரு. வெப் 1852 ஆம் ஆண்டு தம்முடன் எட்டு இளைஞர்களை அழைத்துக் கொண்டு சாஸ்திரியாரிடம் சென்று, அவரிடம் கீர்த்தனைகளைப் பாடும் முறை பற்றியும், அதில் பயன்படுத்தப்பட்டுள்ள இராக, தாள முறை பற்றியும் கேட்டுத் தெரிந்து கொண்டார். பயிற்சி பெற்ற இவர்கள் சபை மக்களுக்குக் கீர்த்தனைகள் பாடும் முறைபற்றி விளக்கினர். மக்களும் கீர்த்தனைகளைப் பாட ஆரம்பித்தனர். மக்களின் கைகளில் ஞானப்பாடல் இருப்பது போன்று கீர்த்தனைகளும் இருக்கவேண்டும் என்னும் நல்லெண்ணத்துடன் வெப் போதகர் 1853 ஆம் ஆண்டு "ஞான கீதங்கள்" என்னும் நூலைத் தொகுத்து வெளியிட்டார். இதுவே கீர்த்தனைகளின் முதல் தொகுப்பு நூல். இந்நூலில் சாஸ்திரியாரின் பாடல்களை வெளியிட வெப் போதகர் சாஸ்திரியாரிடம் அனுமதி பெற்றிருந்தார்.    இதன் பின்னர் கிறிஸ்தவத் தாய்மொழிக் கல்விக் கழகம்   (Christian Vernacular Education Society)  இந்நூலை 1870க்கு முன்னர் இருமுறை மறுபதிப்புச் செய்தது

                பசுமலை இறையியல் பள்ளியில் இரண்டாவது முதல்வராக 1870 ஆம் ஆண்டு முதல் 1892 ஆம் ஆண்டுவரை பணியாற்றிய அருள்திரு. டாக்டர்  ஜார்ஜ் டி. வாஷ்பர்ன் (Rev. Dr. G.T. Washburn)   1853 இல் வெளிவந்த கீர்த்தனைகளுடன் பல புதிய கீர்த்தனைகளைச் சேர்த்து திருத்தங்கள் பல செய்து புதுப்பித்து 1870 ஆம் ஆண்டு கீர்த்தனை நூலின் இரண்டாம் பதிப்பை வெளியிட்டார். இந்நூலில் இடம் பெற்ற கீர்த்தனைகளின் எண்ணிக்கை 300 ஆகும். நூலின் முகவுரையில் "தமிழ் இராகங்களைத் தேவாராதனைக்குப் பாவித்தவராகிய தஞ்சை வேதநாயக சாஸ்திரியாரவர்களுக்குத் தமிழ் நாட்டுக் கிறிஸ்தவர்கள் நன்றி பாராட்ட மிகுந்த கடமைப் பட்டிருக்கிறார்கள்" என அவர் குறிப்பிட்டுள்ளார்

                இரண்டாம் பதிப்பிற்குப்பின் தமிழகத்தின் பல்வேறு இடங்களிலுள்ள கிறிஸ்தவக் கவிஞர்கள் கீர்த்தனைகள் எழுதினர். தமிழ்க் கிறிஸ்தவர்களிடம் வளர்ச்சி நிலைகள் பல காணப்பட்டன. இவற்றை மனதில் கொண்டு புதிய பதிப்பினை வெளியிட ஆவல் கொண்டனர். இரண்டாம் பதிப்பிலுள்ள வெண்பா முதலிய பாவினங்களையும் 44 கீர்த்தனைகளையும் நீக்கி, எட்டுக் கீர்த்தனைகளை இரண்டாகப் பிரித்து, 109 புதிய  கீர்த்தனைகளைச் சேர்த்து 373 கீர்த்தனைகள் அடங்கிய "ஞான கீதங்கள்" என்னும் நூலை 1901 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மூன்றாம் பதிப்பாக அருள்திரு. ஜே.எஸ். சாண்ட்லர்  (Rev. John Scudder Chandler)          வெளியிட்டார். இந்நூலுக்கு அவர் எழுதிய  முன்னுரையில்,

"வேதநாயக சாஸ்திரியார் தமிழ்க் கிறிஸ்தவக் கீர்த்தனைகளுக்கு எங்ஙனம் முன்னவராகவும் முன்னோடியாகவும் இருந்தாரோ அதுபோன்று ஞானப் பாடல்களுக்கு பெப்ரீசியஸ் முன்னோடியாக விளங்கினார்"
எனக்  குறிப்பிட்டுள்ளார். இம்மூன்றாம் பதிப்பில் புதிதாகச் சேர்க்கப்பட்ட 109 கீதங்களில் நான்கு "திருநெல்வேலி ஞானக் கீர்த்தனைகள்" என்னும் புத்தகத்திலிருந்தும், பத்து தரங்கம்பாடி "சுவிசேஷ பிரசங்க கீதங்கள்" என்னும் நூலிலிருந்தும், இருபத்து நான்கு "பாலர் கீர்த்தனைகள்" என்னும் நூலிலிருந்தும், மீதமுள்ள நாற்பத்தெட்டு புதிதாகக் கிடைத்த 600 கீர்த்தனைகளிலிருந்தும் தெரிந்தெடுக்கப்பட்டன. இப்பதிப்பின் முகவுரையில்,
 "வேதநாயக சாஸ்திரியாரவர்களுடைய பாட்டுகள் 95 இப்புதுப் புத்தகத்தில் அடங்கியிருக்கின்றன. அவருக்கு அடுத்தவராகிய மயிலாடி ஜான் பால்மர் அவர்களின் பாட்டுகள் 45 இதிலுண்டு"
என ஜே.எஸ். சாண்ட்லர் குறிப்பிட்டுள்ளார். இப்பதிப்பைத் தொடர்ந்து ஞானப்பாடல்களும் கீர்த்தனைகளுமாகச் சேர்ந்த இந்நூல் "கிறிஸ்தவப் பாமாலைப் பாடல்கள்" என்னும் தலைப்பில் பல பதிப்புகளாக வெளிவந்து கொண்டே இருக்கின்றது. ஞானப்பாடல்கள் தமிழ் வளம் குறைந்தவைகளாக இருந்தாலும் கருத்துச் செறிவும், இசைநயமும் உடையனவாக அமைந்து ஆன்மீக பலமும் உற்சாகமும், ஆறுதலும் தரும் வகையில் அமைந்துள்ளன.

1922 ஆம் ஆண்டில் சென்னைக் கிறிஸ்தவ சன்மார்க்க நூல் சங்கம் கீர்த்தனை நூலின் நான்காம் பதிப்பை வெளியிட ஒரு புதிய குழுவை ஏற்படுத்தியது. இக்குழு 1923 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பசுமலையிலும், 1924 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் தஞ்சாவூரிலும், அதன்பின்னர் சென்னையிலும் பல முறை கூடி புதிய கீர்த்தனை நூல் தொடர்பான கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தியது. அக்குழு 1926 ஆம் ஆண்டில் நான்காம் பதிப்பை ஆயத்தப்படுத்தியது. கிறிஸ்தவ சன்மார்க்க நூல் சங்கம் இந்நூலை 1926 ஏப்ரல் மாதம் வெளியிட்டது.

1943 ஆம் ஆண்டில் லுத்தரன் சபைத் தலைவர்கள் தங்கள் சபைகளில் பாடவேண்டிய சில கீர்த்தனைகளை இத்தொகுப்பு நூலுடன் சேர்த்தால், லுத்தரன் சபைகளுக்கும் இதைப் பொதுவாக வழங்கலாம் என கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்திற்குத் தெரிவித்தார்கள். இதனடிப்படையில், கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் கீர்த்தனை நூலின் ஒரு பொதுவான புதிய விரிவாக்கப் பதிப்பை வெளியிடும் நோக்கில், எல்லாச் சபைகளிலிருந்தும் ஒரு பொதுக் குழுவை நியமித்தது. இக்குழு 1943 இல் முதலில் கூடி கீர்த்தனை நூலில் அதிக மாறுதல் செய்வது நல்லதல்ல என்றும், லுத்தரன் சபையாருக்கு வேண்டிய 35 கீர்த்தனைகளைச் சேர்க்கவேண்டும் எனவும் தீர்மானித்தது. இச்சூழலில் உலகப் போரினால் நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாகப் புதிய நூல் அச்சிடப்படாமல் காலதாமதமானது.

உலகப் போர் முடிந்தபின் 1947 இல் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் ஒரு புதிய குழுவை நியமித்து, அது விரைவில் புதிய பதிப்பை வெளியிட உத்தரவு அளித்தது. அப்புதிய குழுவில் எல்லாத் திருச்சபைகளிலிருந்தும் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் இடம் பெற்றிருந்தனர். இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக அருள்திரு. எச்.. பாப்லி திறம்படச் செயல்பட்டார். இந்த ஐந்தாம் பதிப்பு 1950ஆம் ஆண்டு மே மாதம் வெளியானது. 1950க்கும் 1980க்கும் இடையில் ஆறு முதல் 12 பதிப்புகளை இந்நூல் கண்டது.

1980 ஆம் ஆண்டில் கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் கிறிஸ்தவக் கீர்த்தனைகள் நூலின் திருத்திய விரிவாக்கப் பதிப்பு ஒன்றினை வெளிக்கொணரும் திட்டத்தின் அடிப்படையில் கருத்தரங்கம் நடத்தியது. இசை, இலக்கியம், இறையியல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்ட அறிஞர்கள் பலர் இதில் கலந்து கொண்டனர். பிழைகளைத் திருத்துவது, பாட பேதங்களைக் காண்பது, பாடல்கள் சிலவற்றை நீக்குவது,          சிலவற்றைச் சேர்ப்பது எனும் கருத்துகளின் அடிப்படையில் 1980 இல் பதின்மூன்றாம் பதிப்பு வெளியானது. இவ்வாண்டில் கிறிஸ்தவக் கீர்த்தனைகளைத் திருச்சபைகளில் எந்த அளவுக்குப் பயன்படுத்துகின்றனர் என்பது பற்றிய கள ஆய்வுப் புள்ளி விபரம் சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரி புள்ளியியல் துறையின் மேனாள் தலைவர் டாக்டர் கிப்ட் சிரோமணி அவர்களால் சேகரிக்கப்பட்டது.

1987 இல் மீண்டும் குழு கூட்டப்பட்டது. இக்குழுவின் சிறப்புக் கூட்டத்தில் இறையியல் தெளிவுகளையும், கள ஆய்வுப் புள்ளி விபர முடிவுகளையும் கருத்தில் கொண்டு சில முடிவுகள் எடுக்கப்பட்டன. வழக்கில் இல்லாத பாடல்கள் சிலவற்றை நீக்குவது, பாடல்கள் மற்றும் பாடலடிகளைத் தகுந்த முறையில் வரிசைப்படுத்துவது, பாடல் அடிகளில் இசை, இலக்கணம், இறையியல் சார்ந்த திருத்தங்கள் செய்வது,   அண்மைக் காலங்களில் செல்வாக்குப் பெற்றுள்ள கருத்துச் செறிவுள்ள பாடல்கள் சிலவற்றைச் சேர்க்க வேண்டியது ஆகியன குறித்தும் முடிவுகள் எடுக்கப்பட்டன. இவைகளுக்கு ஏற்ப கிறிஸ்தவ இலக்கியச் சங்கத்தின் பதினான்காவது திருத்த விரிவாக்கப் பதிப்பு ஜூன் மாதம் 1987 ஆம் ஆண்டு வெளியானது. இப்பதிப்புக் குழுவின் தலைவராக பேராசிரியர் பொன்னு . சத்தியசாட்சி, குழு கூட்டுனராக டாக்டர் அருள்திரு. தி. தயானந்தன் பிரான்சிஸ் ஆகியோர் செயல்பட்டனர். இதன்பின்னர் இவ்வெளியீடு பல பதிப்புகளைக் கண்டு வருகின்றது.

மேலைநாட்டார் எழுதிய கீர்த்தனைகள்

முதன் முதலாகக் கிறிஸ்தவக் கீர்த்தனை எழுதியவர் இத்தாலியரான வீரமாமுனிவர் (1680 - 1747) ஆவார். இவர் எழுதிய,
                                 
       ஜகநாதா, குருபரநாதா, திரு
                அருள் நாதா, ஏசுபிரசாத நாதா!

எனத் தொடங்கும் கீர்த்தனை, சாண்ட்லர் 1901 இல் தொகுத்த ஞான கீதங்கள் என்னும் நூலில்   பத்து சரணங்களை உடைய   இரண்டு பாடல்களாக (88 , 89) இடம்பெற்றுள்ளது. இன்றும் இக்கீர்த்தனை ஐந்து சரணங்கள் உடைய ஒரு பாடலாக நாம் பயன்படுத்தும் கீர்த்தனை நூலில் காணப்படுகின்றது. அயர்லாந்து நாட்டினரான பேராயர் இராபர்ட் கால்டுவெல்  (1814 - 1891),

       ஏசையா பிளந்த ஆதிமலையே
                மோசநாளில் உன்னில் ஒளிப்பேனே

என்னும் கீர்த்தனையை எழுதியுள்ளார். அமெரிக்கரான அருள்திரு. எட்வர்ட் வெப் (1819-1898)   மோகன இராகம், அடதாளசாப்பு தாளத்தில் அமைந்துள்ள
         பாவியாகவே வாறேன்; பாவம் போக்கும்
                    பலியாம் என் ஏசுவே, வாறேன்

என்னும் கீர்த்தனையை இயற்றியுள்ளார். மேலும் மற்றுமொரு அமெரிக்கரான அருள்திரு. ஜே.எஸ். சாண்ட்லர் (1849 - 1934),

       பாவப்பாரில் உன்னத சமாதானம்; !
                தேவ வாக்கிதுவல்லோ?

எனத் தொடங்கும் கீர்த்தனையை எழுதியுள்ளார். இக்கீர்த்தனை மட்டும் இன்று வழக்கில் உள்ளதாகத் தெரியவில்லை.

இலங்கை நாட்டினர் எழுதிய கீர்த்தனைகள்

இலங்கையிலிருந்து ஜெ.ஆர். அர்னால்டு, அருள்திரு. டி.பி. நைல்ஸ், அலன் ஆபிரகாம் அம்பலவாணர், .எம்.கே. குமாரசுவாமி, .பொ. முத்தையா, .. இயேசு சகாயம்,எஸ்.எஸ். எரேமியா, அருள்திரு. ஜே.எஸ். கிறிஸ்மஸ், இரா. பிரிக்கன்ரிட்ஜ் போன்ற கிறிஸ்தவக் கவிஞர்களைக் குறிப்பிடலாம். இவர்களுள் .எம்.கே. குமாரசுவாமி, ஜெர்மன் மற்றும் ஆங்கில மொழியிலுள்ள பதினேழு பாடல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இப்பாடல்கள் இன்றும் இலங்கையினர் பயன்படுத்தும் ஞானப்பாடல்களில் இடம்பெற்றுள்ளன. இலங்கைக் கவிஞர்கள் எழுதிய கீர்த்தனைகளுள் கருணைக் கடைக்கண் பாரையா பரனே, தேவா இரங்கும் என்னிலே, நெஞ்சமே நீ அனுதினமும் நின்மலனை, தேவாவி தெண்டனிட்டேன், இயேசு இராஜனின் திருவடிக்கே சரணம் சரணம் சரணம் என்னும் பாடல்களைச் சான்றாகக் குறிப்பிடலாம். இலங்கைக் கவிஞர்களுள் எஸ்.எஸ். எரேமியா இயற்றியுள்ள,

1.             பாதம் ஒன்றே வேணும் இந்தப் பாரில் எனக்கு
2.             மணவாழ்வு புவி வாழ்வினில் வாழ்வு மங்கல வாழ்வு
3.             பாலர் நேசனே மிகப் பரிவு கூர்ந்திந்த
4.             ஓய்வு நாளதனை யாசரித்திடுவீர் உலகிலுள்ளோரே

போன்ற பாடல்களை இன்றும்  நாம் பாடி வருகிறோம்.

தமிழ் நாட்டுக் கவிஞர்கள்

தமிழ்நாட்டுக் கவிஞர்களுள் வேதநாயக சாஸ்திரியார் தொடங்கி சுமார் நூறு கீர்த்தனைக் கவிஞர்கள் ஆயிரத்துக்கும் மேலாகக் கீர்த்தனைகள் படைத்துள்ளனர். இவற்றுள் பல, கால வெள்ளத்தால் அழிந்து விட்டன; பல நம்மால் மறக்கப்பட்டு விட்டன; பல இராகம் தெரியாமல் விடப்பட்டன; பல புதிய பதிப்புகள் வெளியிடப்படும்போது விடுபட்டன

ஆரம்ப நிலையில் வேதநாயக சாஸ்திரியாரின் கீர்த்தனைகள் தனி நூலாக வெளியிடப்பட்ட சூழலில் அக்கீர்த்தனைகள் கிறிஸ்தவர்களால் வழிபாடுகளில் பாடப்பட்டு வந்தன. இக்கீர்த்தனைகளின் சிறப்பால் கவரப்பட்ட பலர் கீர்த்தனைகள் இயற்றத் தொடங்கினர். அவர்களுள்  தேவவரம் முன்ஷியார்,   அருள்திரு. சற்குணம் வின்பிரெட், ஜான் பால்மர், காபிரியேல் உபதேசியார், அருமைநாயகம் சட்டம்பிள்ளை,      எச்.. கிருஷ்ண பிள்ளை, தே. தேவசகாயம் உபாத்தியாயர், அருள்திரு. . வேதக்கண்,         அருள்திரு. சி. மாசிலாமணி,     மரியான் உபதேசியார், அருள்திரு. பாக்கியநாதன் தாவீது, தீ. யோசேப்பு, சி. யோசேப்புஅருள்திரு. ஞா. சாமுவேல், சி. அருமைநாயகம், திட்டூர் தேசிகர்,                 அருள்திரு. வே. மாசிலாமணிஆபிரகாம் பண்டிதர், அருள்திரு. . வேதமாணிக்கம், அருள்திரு. ஜா.சே. வேதநாயகர், அருள்திரு. சி.பி. ஞானமணி, அருள்திரு. வே. சந்தியாகு, அருள்திரு. எஸ். பரமானந்தம்,               டாக்டர். சவரிராயன் ஏசுதாசன், பாகவதர் . வேதநாயக சாஸ்திரியார்,           தே..ஞானாபரணம் பண்டிதர், சவரிமுத்து உபாத்தியாயர், அருள்திரு. . பொன்னுசாமி,                  சா. மோட்சக்கண், தேவநேயப் பாவாணர்டாக்டர் வீ..கா. சுந்தரம், புன்னையடியூர் சு. யோசேப்பு உபதேசியார்,               சு.முத்துசாமி உபாத்தியாயர், ..பிச்சைமுத்து போன்றோரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். சுருக்கம் கருதி ஏராளமான கீர்த்தனைக் கவிஞர்களின் பெயர்களை இங்குக் குறிப்பிட இயலவில்லை. சுமார் மூன்று நூற்றாண்டுகளாக   இக்கீர்த்தனைக் கவிஞர்களால் எழுதப்பட்ட கீர்த்தனைகள் இன்றும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்தனவாக விளங்குகின்றன. ஆனால் கீர்த்தனைகளின் இராகங்களை மாற்றி நாம் விரும்புவது போலப் பாடுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இன்று சுமார் ஐந்நூறு கீர்த்தனைகள் பல்வேறு வழிபாட்டு நூல்களிலுமாக வழக்கிலுள்ளன. அவற்றுள்ளும் இருநூறு கீர்த்தனைளை மட்டுமே திரும்பத் திரும்பப் பாடி வருகின்றனர். இன்று தமிழ்நாட்டு மக்கள் பயன்படுத்திவரும்  பல்வேறு கிறிஸ்தவக் கீர்த்தனைத் தொகுப்பு நூல்களுள் கன்னியாகுமரிப் பேராயத்தால் 2003 ஆம் ஆண்டு புதிய தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள "ஞானக் கீர்த்தனைகள்" என்னும் நூல் சிறந்ததாகவும் தரம் மிக்கதாகவும் காணப்படுகின்றது.

கீர்த்தனைகளைப் பாடிய கவிஞர்கள் கிறிஸ்துவின் மீது கொண்ட பக்தியாலும் பற்றுறுதியாலும் பல்வேறு விதமான சூழல்களில் கீர்த்தனைகளைப் பாடியுள்ளனர்.    இக்கீர்த்தனைகள்   இறைவனுடைய திருவார்த்தைகளின் அடிப்படையில் கடவுளின் உதவியால் இயற்றப்பட்டதால் இப்பாடல்கள் நமக்கு எக்காலத்திலும் ஆறுதலையும் மகிழ்ச்சியையும் அளிக்கின்றன. கீர்த்தனைகளின் சிறப்பம்சத்திற்கு மற்றுமொரு காரணம் இவை இறையியல் கருத்துகளை மிகவும் எளிமையாகத் தருகின்றன. வேதவாசிப்பு, ஜெபம் ஆகியவை நமக்கு எவ்வாறு ஆறுதலும் அமைதியும் தருகின்றனவோ அதைப்போன்று கீர்த்தனைகளைப் பாடுவதாலும், அவற்றின் மூலம் விண்ணப்பங்களை ஏறெடுப்பதாலும் ஆன்மீக அமைதியும் இறையுணர்வும் பெறமுடிகின்றது.


கிறிஸ்தவக் கீர்த்தனைகளைப் பக்தி உணர்வோடு பொருள் உணர்ந்து, இராகத்தை மாற்றாமல் பாடிப் பயன்பெறுவோமாக!